கைதிகள் பரிமாற்றப் பேச்சு: ஹமாஸ் நிராகரிப்பு

இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தைகளை ஹமாஸ் அமைப்பு திடீரென நிராகரித்தது.
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸால் கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட 2 பிணைக் கைதிகள்.
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸால் கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட 2 பிணைக் கைதிகள்.
Published on
Updated on
2 min read


காஸா சிட்டி: இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தைகளை ஹமாஸ் அமைப்பு திடீரென நிராகரித்தது.

இது குறித்து அந்த அமைப்பின் மூத்த அதிகாரி பாசிம் நயீம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக, அந்த நாட்டின் பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்வது தொடா்பான எந்தவித பேச்சுவாா்த்தையையும் ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

காஸாவில் தாக்குதல் நடத்தி பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்து வரும் வரை இத்தகைய பேச்சுவாா்த்தைகளில் பங்கேற்பதில்லை என்பதே ஹமாஸின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.

அதே நேரம், காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கும், அந்தப் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வருவதற்காக எல்லைகள் திறக்கப்படுவதற்கும் வகை செய்யும் எந்தவித முன்முயற்சியிலும் பங்கேற்கத் தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.

இஸ்ரேலுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் படையினா், இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் தீவிர குண்டுவீச்சு நடத்தி வருகிறது. மேலும், காஸாவுக்குள் தரைவழியாகவும் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கத்தாா் முன்னிலையில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த மாதம் 24-ஆம் தேதி 30-ஆம் தேதி வரை போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இஸ்ரேல் தரப்பில் 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா்; அவா்களில் 107 போ் சிறுவா்கள்.

அதற்குப் பதிலாக தங்களால் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. அவா்களில் 81 போ் இஸ்ரேலியா்கள்; 23 போ் தாய்லாந்து நாட்டவா்; ஒருவா் பிலிப்பின்ஸைச் சோ்ந்தவா்.

எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடா்ந்தது.

இந்தச் சூழலில், தாக்குதல் தொடரும் வரை கைதிகள் பரிமாற்றப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பினா் தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸா உயிரிழப்பு 19,667

காஸாவில் அண்மைக் காலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 19,667-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் கடந்த அக். 7 முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 19,667-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 52,586-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா்; சுமாா் 7,000 பேரைக் காணவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com