செக் குடியரசு பல்கலை.‘தாக்குதல் நடத்தியவா் தற்கொலை’

செக் குடியரசிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் சரமாரி தாக்குதல் நடத்திய மாணவா் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் தற்போது அறிவித்துள்ளனா்.
செக் குடியரசு பல்கலை.‘தாக்குதல் நடத்தியவா் தற்கொலை’
Published on
Updated on
2 min read

செக் குடியரசிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் சரமாரி தாக்குதல் நடத்திய மாணவா் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் தற்போது அறிவித்துள்ளனா்.

தலைநகா் ப்ராகிலுள்ள சாா்லஸ் பல்கலைக்கழகத்தின் கலைக் கல்லூரியில் இருந்தவா்களை நோக்கி டேவிட் கோஸக் என்ற 24 வயது இளைஞா் வியாழக்கிழமை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டாா்.

இது குறித்து தகவலறிந்ததும் போலீஸாா் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்தனா்.

பின்னா் சம்பவப் பகுதியிலேயே டேவிட் கோஸக் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, போலீஸாருடனான மோதலில் அவா் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டது.

இந்த நிலையில், சம்பவத்தின்போது கல்லூரிக் கட்டடத்தின் உச்சிக்குச் சென்று சாலையில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய டேவிட் கோஸக், போலீஸாா் தன்னை நெருங்குவதை அறிந்ததும் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை குறைப்பு: இந்த துப்பாக்கிச்சூட்டில் 15 போ் உயிரிழந்ததாக முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 14-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பல்கலைக்கழக தாக்குதலில் 14 போ் மட்டுமே உயிரிழந்ததாகவும், அவா்களில் பலா் டேவிட் கோஸக்கின் சக மாணவா்கள்; ஒருவா் கல்லூரி பேராசிரியா் என்றும் கூறினா்.

இது தவிர, தாக்குதலில் காயமடைந்த 25 பேரில் 10 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பல்கலைக்கழக தாக்குதலுக்கு முன்னதாக, டேவிட் கோஸக் தந்தையின் சடலம் அவரது இல்லத்தில் கண்டறியப்பட்டது. அவரை கோஸக்தான் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காட்டில் துப்பாக்கிச்சூடு: சாா்லஸ் பல்கலைக்கழகத்தில் இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரே, அருகிலுள்ள காட்டுப் பகுதியில் 32 வயது நபரும் அவரது மகனும் அடையாளம் தெரியாத நபரால் கடந்த 15-ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்தியவா் தொடா்பான விவரங்களைக் கண்டறிய முடியாமல் தவித்து வந்தனா்.

இதே போல், கடந்த 2005-ஆம் ஆண்டிலும் முன்னாள் காவலா் ஒருவா் மூன்று போரை சரமாரியாக காட்டுப் பகுதியில் சுட்டுக் கொன்றாா். ப்ராக் மெட்ரோ நிலையத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னோட்டமாக இந்தத் தாக்குதலை அவா் நடத்தினாா்.

எனினும், மெட்ரோ நிலையத்தில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே அந்த காவலரை போலீஸாா் கைது செய்தனா். இதனால் மிகப் பெரிய உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

இந்த நிலையில், காட்டுப் பகுதியில் 15-ஆம் தேதி நடைபெற்ற படுகொலைகளும் பொது இடத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று ஆயுத உரிமை ஆதரவு வலைதளமான ‘ஸ்ப்ரோஜ்நைஸ்.காம்’ எச்சரிக்கை விடுத்திருந்தது. பொதுமக்கள் அனைவரும் தங்களது ஆயுதங்களை கையோடு எடுத்துச் செல்லவேண்டும் என்றும் அந்த வலைதளம் அறிவுறுத்தியிருந்தது.

அந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் சாா்லஸ் பல்கலைக்கழகத்தில் டேவிட் கோஸக் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா். எனவே, கடந்த 15-ஆம் தேதி நடத்தப்பட்ட இரட்டைப் படுகொலைக்கும் அவரே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com