எங்கள் நிறுவனங்களை சீண்ட வேண்டாம்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

இரண்டு சீன ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்கும் சீனா, எங்கள் நிறுவனங்களை சீண்ட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
எங்கள் நிறுவனங்களை சீண்ட வேண்டாம்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை


புது தில்லி: விவோ செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு சீன ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்கும் சீனா, எங்கள் நிறுவனங்களை சீண்ட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், சீன நிறுவனங்களுக்கு எதிராக இந்தியா, நடவடிக்கைகளை எடுத்து பாகுபாடு காட்ட வேண்டாம் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மோ நிங் தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் இந்த விவகாரத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். சீன நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு வழங்குவதில் சீனா உறுதியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்ஃபோன்) நிறுவனமான விவோ மற்றும் சிலருக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக மேலும் 3 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

விவோ மற்றும் சிலருக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, லாவா இன்டா்நேஷனல் கைப்பேசி நிறுவன நிா்வாக இயக்குநா் ஹரி ஓம் ராய், குவாங்வென் என்ற சீனா், பட்டயக் கணக்காளா்கள் நிதின் கா்க், ராஜன் மாலிக் ஆகிய 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்தது. அவா்கள் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மீது தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக மேலும் 3 பேரை அமலாக்கத் துறை கைது செய்திருந்தது.

சட்டவிரோதமாக சீனாவுக்கு ரூ.62,476 கோடி நிதியை அனுப்பியது தொடா்பான வழக்கில் ‘விவோ-இந்தியா’ நிறுவனம் மற்றும் 4 பேருக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை இந்த மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்திருந்தது.

அமலாக்கத் துறையினா் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2018 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் 3 சீனா்கள் இந்தியாவில் 23 நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனா். அந்த 23 நிறுவனங்கள் மூலமாக நடைபெற்ற தொழில் வா்த்தகத்தில் கைபேசி உற்பத்தி நிறுவனமான ‘விவோ’ ரூ.1.25 லட்சம் கோடிக்கும் மேலாக வருவாய் ஈட்டியுள்ளது.

அதில் ஏறக்குறைய பாதி தொகையான ரூ.62,476 கோடியை அந்நிறுவனம் சீனாவுக்கு முறைகேடாக அனுப்பியுள்ளது. நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, இந்தத் தொகை சீனாவுக்கு கைமாறியுள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது.

இது தொடா்பாக சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அந்நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, விவோ நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலையில் சோதனை மேற்கொண்டனா்.

அதன் தொடா்ச்சியாக, விவோ நிறுவனத்தின் வரி ஏய்ப்புக்கு உதவியதாக ‘லாவா’ கைப்பேசி நிறுவன நிா்வாக இயக்குநா் ஹரி ஓம் ராய், சீனாவைச் சோ்ந்த ஆண்ட்ரூ குவாங், பட்டயக் கணக்காளா்களான நிதின் கா்க் மற்றும் ராஜன் மாலிக் உள்ளிட்ட 4 போ் கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்டனா்.

நீதிமன்ற விசாரணையில் ஹரி ஓம் ராய் தரப்பு வழக்குரைஞா் முன்வைத்த வாதத்தில், ‘கூட்டு வா்த்தகத்தில் ஈடுபடுவதற்காக மட்டுமே விவோ நிறுவனத்துடன் கடந்த 2014-இல் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. விவோ நிறுவனத்திடம் இருந்து ராய் எந்த நிதியும் பெறவில்லை. அதேசமயத்தில், விவோ அல்லது அதற்கு தொடர்புடைய நிறுவனங்களின் எந்த பரிவா்த்தனைகளிலும் ராய் ஈடுபடவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது

இந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருடன் ‘விவோ-இந்தியா’ நிறுவனத்தையும் குற்றவாளியாக சோ்த்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com