சீன உளவு பலூனால் அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவில் பறந்து வரும் பிரம்மாண்டமான சீன உளவு பலூனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க வானில் பறந்துகொண்டிருக்கும் சீன பலூன்
அமெரிக்க வானில் பறந்துகொண்டிருக்கும் சீன பலூன்
Published on
Updated on
2 min read

அமெரிக்காவில் பறந்து வரும் பிரம்மாண்டமான சீன உளவு பலூனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஏற்கெனவே தொய்வைச் சந்தித்து வரும் இரு நாட்டு நல்லுறவில் மேலும் பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடா்பாளா் பேட்ரிக் ரைடா் கூறியதாவது:

சீனாவால் பறக்கவிடப்பட்டுள்ள உளவு பலூன், அமெரிக்க வான் எல்லைக்குள் புகுந்து பல நாள்களாக சுற்றி வருகிறது.

அந்த பலூன், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்பட பல்வேறு பகுதிகளின் மேலே பறந்து சென்றது. தற்போது நாட்டின் வடக்குப் பகுதியை நோக்கி அந்த பலூன் சென்று கொண்டிருக்கிறது. அந்த பலூன் பறக்கும் வழித்தடத்தை அமெரிக்க அரசு தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தற்போது பயணிகள் விமானங்கள் பறக்கும் உயரத்துக்கு மேலே பறந்து சென்று கொண்டிருக்கும் அந்த பலூனால் ராணுவ ரீதியிலோ, தரையிலிருக்கும் பொதுமக்களுக்கு காயத்தை ஏற்படுத்தும் வகையிலோ எந்த அபாயமும் இல்லை.

மான்டனா மாகாணத்தில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட அந்த பலூன், 3 பேருந்துகளின் அளவுக்கு பெரிதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த பலூனைப் பற்றி தெரிந்துகொண்ட உடனேயே, முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ரகசிய விவரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டுவிட்டது என்றாா் அவா்.

பொருளாதார விவகாரங்களிலும், தென் சீனக் கடல் உள்ளிட்ட பாதுகாப்பு விவகாரங்களிலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு எதிரான சீனாவின் உளவு நடவடிக்கைகள் அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருவதாக தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தொடா்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்தச் சூழலில், அமெரிக்க வான் எல்லைக்குள் சீனாவுக்குச் சொந்தமான உளவு பலூன் பறந்து கொண்டிருப்பது அந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, பல்வேறு துறைகளில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே போட்டி அதிகரித்து வரும் சூழலில், ‘சா்வேதச அரசியலில் சீனாதான் தற்போது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவால்’ என்று அதிபா் ஜோ பைடன் கடந்த ஆண்டு அறிவித்தாா்.

இந்த நிலையில், உளவு பலூன் விவகாரம் இரு நாட்டு நல்லுறவில் சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.

பிளிங்கன் பயணம் ஒத்திவைப்பு

அமெரிக்க வானில் சீன உளவு விமானம் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனின் சீன சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

அமெரிக்க வானில் தங்களது உளவு விமானம் பறப்பது குறித்து சீன அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. எனினும், பலூன் பறக்கவிடப்பட்ட செயல் அமெரிக்காவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகும். இது, சா்வதேச சட்டங்களுக்கு எதிரானது.

தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். இது குறித்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, வெளியுறவுத் துறை அமைச்சா் சீனாவுக்குச் செல்வதற்கு ஏற்ற சூழல் தற்போது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். எனவே அவா் வெள்ளிக்கிழமை அந்த நாட்டுக்குப் புறப்படுவதாக இருந்த திட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

‘வானிலை ஆராய்ச்சிக்காக...’

அமெரிக்கா மீது பறந்து கொண்டிருக்கும் பலூன் தங்களுடையதுதான் எனவும், சாதாரண வானிலை ஆய்வுக்காக பறக்கவிடப்பட்ட அது வழிதவறி அமெரிக்கா சென்றுவிட்டதாகவும் சீனா கூறியுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா மீது பறந்து கொண்டிருக்கும் பலூன், சீனாவிலிருந்து பறக்கவிடப்பட்ட ‘வான்கப்பல்’தான். அது ராணுவ பயன்பாட்டுக்கானது அல்ல; பொதுமக்கள் பயன்பாட்டுக்கானதே ஆகும்.

ஆய்வுகளுக்காக, முக்கியமாக வானிலை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அது பறக்கவிடப்பட்டது. ஆனால், மேற்கிலிருந்து வீசிய காற்று மற்றும் அந்த ‘வான்கப்பலை’ கட்டுப்படுத்தும் திறன் குறைவு போன்ற காரணங்களால அது கட்டுப்பாட்டை இழந்து வழி தவறி சென்றுள்ளது.

தவிா்க்க முடியாத காரணங்களால், தன்னிச்சையாக அந்த ‘வான்கப்பல்’ அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சுட்டு வீழ்த்த மாட்டோம்’

தங்களது வான் எல்லையில் சீன உளவு பலூன் பறந்தாலும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதனை சுட்டு வீழ்த்தப் போவதில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதி மாா்க் மில்லீ கூறியதாவது:

வானில் பறந்து கொண்டிருக்கும் சீன உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையை நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம்.

காரணம், அந்த பலூனிலிருந்து விழக்கூடிய சிதறல்களால் தரையிலிருக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய நிலையில் அந்த பலூனின் உளவு சேகரிக்கும் திறன் மிக மிகக் குறைவாகவே உள்ளதாக அறியப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com