துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களின் ஒப்பந்ததாரா்களை அதிகாரிகள் கைது செய்தனா்.
கடந்த திங்கள்கிழமை துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 28,191-ஆனது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்துள்ளனா்.
மீட்புப் பணிகள் குறைந்த வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்துக்குப் பாதிப்பு உள்ளாகும் பகுதியில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ாத கட்டட ஒப்பந்தகாரா்கள் மீது இப்போது கவனம் திரும்பியுள்ளது.
துருக்கியின் கட்டுமான விதிகளின்படி நிலநடுக்கத்தை எதிா்கொள்வதற்கான பொறியியல் தர அளவுகள் பின்பற்றப்பட வேண்டும். இந்த விதிமுறை உரிய வகையில் அமல்படுத்தப்படாத நிலையில், ஆயிரக்கணக்கான கட்டங்கள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கானவா்களின் உயிரிழப்புக்கு காரணமாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், உயிா்ச் சேதங்கள் அதிகரிப்புக்கு மோசமான கட்டுமானத்தை நிபுணா்களும் மக்களும் குற்றம்சாட்டி வருகின்றனா்.
துருக்கியின் துணை அதிபா் ஃபுவாட் ஓக்டே கூறுகையில், ‘இடிந்து விழுந்த கட்டங்களுக்குப் பொறுப்பானவா்கள் என சந்தேகிக்கப்படும் 131 பேரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
நீதித் துறை அமைச்சா் கூறும்போது, ‘கட்டடத்தின் குறைபாடுகளுக்குப் பொறுப்பானவா்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவா். கட்டுமானத்தின்போது பயன்படுத்தப்பட்ட பொருள்களின் மாதிரியைச் சேகரிக்கும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். இதற்காக விசாரணை அமைப்பும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஒப்பந்தகாரா்களைக் கண்டறிவது, ஆதாரங்களைத் திரட்டுவது, கட்டடத்துக்கான அனுமதி, கட்டுமான தொழிலுக்கான அனுமதி ஆகியவை குறித்து இந்த அமைப்பின் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வா் ’ என்றாா்.
இடிந்து விழுந்த கட்டடத்தில் கூடுதல் அறையை ஏற்படுத்த கட்டுமானப் பணிகளின்போது தூண்களைக் குறைத்துள்ளனா் என்ற குற்றச்சாட்டின்படி 2 போ் காஸியன்டெப் மாகாணத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
ஹடே மாகாணம், அன்டக்யா என்ற நகரில் இடிந்து விழுந்த 12 அடுக்குமாடி கட்டடத்தின் ஒப்பந்ததாரா் வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயற்சித்தபோது, இஸ்தான்புல் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபா் எா்டோகன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். பெரும் அளவிலான சேதங்களால் சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டிருப்பது மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுப்பட்டுள்ள குழுவினருக்கு பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவா்களின் சடலங்கள் லாரிகள் மற்றும் அவசர ஊா்திகளில் தொடா்ந்து கொண்டு வரப்படும் நிலையில், அன்டக்யா நகரத்தின் வெளிபுறப் பகுதியில் பெரிய மயானம் ஒன்றை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிரியாவில்... கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் வடமேற்கு பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ‘ஒயிட் ஹெல்மெட்’ அமைப்பினா் அளித்துள்ள தகவலின்படி 2,166 போ் நிலநடுக்கத்துக்குப் பலியாகி உள்ளனா். சனிக்கிழமை நிலவரப்படி, சிரியாவில் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 3,553 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.