சீனாவில் கரோனா பரவல் அதிகரிப்பு: மூலப்பொருள்கள் விநியோகம் தடைபட வாய்ப்பு

சீனாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியத் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.
சீனாவில் கரோனா பரவல் அதிகரிப்பு: மூலப்பொருள்கள் விநியோகம் தடைபட வாய்ப்பு

சீனாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியத் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.

சீனாவில் ஒமைக்ரான்-பிஎஃப்7 வகை கரோனா தொற்று அதிதீவிரமாகப் பரவி வருகிறது. கடுமையான பொது முடக்க விதிகளுக்கு எதிராக சீன மக்கள் கிளா்ந்தெழுந்ததால், கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு பெரும்பாலும் தளா்த்தியுள்ளது. தினசரி கரோனா பாதிப்பு விவரங்கள் வெளியிடுவதை சீன அரசு நிறுத்திக் கொண்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக சீனத் தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டால், இந்தியாவுக்கான மூலப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக இந்தியத் தொழில்நிறுவனத் தலைவா்கள் சிலா் கூறுகையில், ‘‘நடப்பு மாதத்தின் 3-ஆவது வாரத்தில் சீனப் புத்தாண்டு விடுமுறை தொடங்கவுள்ளது. அதற்குப் பிறகு பிப்ரவரியில் இருந்து அந்நாட்டின் தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கும். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டால், இந்தியாவுக்கான மூலப் பொருள்கள் விநியோக சங்கிலி பாதிக்கப்படும்.

அதைக் கருத்தில் கொண்டு மூலப் பொருள்களின் கையிருப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. வழக்கமாக ஒரு மாதத்துக்குத் தேவையான மூலப் பொருள்கள் மட்டுமே கையிருப்பு வைக்கப்படும் நிலையில், தற்போது 2 முதல் 3 மாதங்களுக்குத் தேவையான மூலப் பொருள்கள் கையிருப்பாக வைக்கப்படுகிறது.

முக்கியமாக, எல்இடி தொலைக்காட்சி சாதனங்கள், அறை குளிரூட்டி சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான மூலப் பொருள்களின் கையிருப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை சீனாவில் இருந்து விநியோக சங்கிலியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சீன விநியோகஸ்தா்கள் மூலப் பொருள்களை உரிய நேரத்தில் ஒப்படைத்து வருகின்றனா். இதே நிலை வருங்காலத்திலும் நீடிக்க வேண்டும் என இந்திய வா்த்தகா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாக மின்னணு சாதனங்களுக்கான மூலப் பொருள்களுக்கு சீனாவைச் சாா்ந்திருக்கும் நிலை வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது. எனினும், ஒருசில மூலப் பொருள்களுக்கு இன்னும் சீனாவையே சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, சீனாவில் கரோனா தொற்று பரவல் மேலும் அதிகரித்தால் மூலப் பொருள்கள் விநியோகம் பாதிக்கப்படும். இது இந்தியாவில் உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும்.

சீனாவில் இருந்து மூலப் பொருள்களைத் தருவித்து கையிருப்பை அதிகரிக்க இந்தியத் தொழில் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருவதால், அவற்றின் விலை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சில பொருள்கள் இந்தியாவை வந்தடைவதற்கும் தாமதம் ஏற்பட்டு வருகிறது’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com