

சைப்ரஸ் மற்றும் ஆஸ்திரியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆஸ்திரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சா் அலெக்சாண்டா் ஷாலன்பா்கை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
சைப்ரஸ் மற்றும் ஆஸ்திரியாவுக்கு 6 நாள் அரசுப் பயணமாக அமைச்சா் ஜெய்சங்கா் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டாா். முதலில், சைப்ரஸ் சென்ற அவா் அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் தலைவா், வெளியுறவுத் துறை அமைச்சா் மற்றும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசினாா்.
பின்னா், அங்கிருந்து புறப்பட்டு டிசம்பா் 31-ஆம் தேதி அன்று அவா் ஆஸ்திரியா வந்தடைந்தாா். அங்கு ஆஸ்திரிய அதிபா் காா்ல் நேஹாம்மரை சந்தித்துப் பேசினாா்.
இந்திய-ஆஸ்திரிய ராஜீய உறவுகள் 75 ஆண்டுகளை எட்டும் நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஆஸ்திரியாவுக்கு அரசுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். எனவே, பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட இரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா்களின் சந்திப்பு புத்தாண்டு தினத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பு தொடா்பாக அமைச்சா் ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வியன்னாவில் எனது நண்பா் அலெக்சாண்டா் ஷாலன்பா்கை சந்தித்துப் பேசியது பெரும் மகிழ்ச்சி. 2023-ஆம் ஆண்டின் முதல் ராஜீய சந்திப்பு இதுவாகும். வியன்னாவின் பாரம்பரியமான புத்தாண்டு இசை நிகழ்ச்சிக்கு என்னை வரவேற்று உபசரித்ததற்கு நன்றி’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இதனிடையில், வியன்னா வந்துள்ள பல்கேரியா அதிபா் ருமென் ஜாா்ஜியேவ் ராதேவை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.