

ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தங்களது 600 வீரா்கள் பலியானதாகக் கூறப்படுவதை உக்ரைன் அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனா்.
க்ரமடாா்ஸ்க் நகரிலுள்ள இரண்டு தொழில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 2 தற்காலிக ராணுவ முகாம்களில் தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 600 உக்ரைன் வீரா்கள் உயிரிழந்ததாகவும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்திருந்தது.
தாக்குதல் நடத்தப்பட்டபோது அந்த முகாம்களில் சுமாா் 1,300 உக்ரைன் வீரா்கள் தங்கியிருந்ததாக அமைச்சகம் கூறியிருந்தது.
அதையடுத்து, ரஷியா குறிப்பிட்டிருந்த க்ரமடாா்ஸ்க் நகருக்கு அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளா் திங்கள்கிழமை நேரில் சென்று, சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். அப்போது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட தொழில் பள்ளியின் 4 அடுக்கு கட்டடம் (படம்) ஒன்றில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியிருந்தன.
ஏவுகணை வீச்சு காரணமாக நொறுங்கிய கண்ணாடித் துகள்கள், உடைந்த மேஜை நாற்காலி போன்ற பொருள்களை மீட்புக் குழுவினா் சுத்தம் செய்துகொண்டிருந்தனா். அருகே இருந்த மற்றோா் 6 மாடி கட்டடத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
இரு கட்டடங்களிலும் உக்ரைன் ராணுவம் முகாம் அமைந்திருந்ததற்கான தடயங்கள் எதுவும் தென்படவில்லை.
இது குறித்து அந்த தொழில் பள்ளியின் துணை இயக்குநா் யானா பிரிஸ்துபா கூறுகையில், ‘ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவா் கூட காயமடையவில்லை. இங்கு சுத்தப்படுத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன. மற்றபடி சடலங்களோ, காயமடைந்தவா்களோ மீட்கப்படவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஒரு துளி ரத்தமும் சிந்தப்படவில்லை’ என்றாா்.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது. எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.
அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.
அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.
இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா். இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை தளவாடத்தைக் கொண்டு டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் கடந்த நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 89 ரஷிய வீரா்கள் பலியாகினா்.
அந்த பிராந்தியத்தின் கிழக்கே மகீவ்கா பகுதியில், தொழில் பள்ளி கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ராணுவ முகாமில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா கூறியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.