‘மேலும் ஓா் உக்ரைன் நகரை கைப்பற்றுகிறது ரஷியா’

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேலும் ஒரு நகரைக் கைப்பற்றும் நிலையில் ரஷியா உள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியா - உக்ரைன் படையினா் இடையிலான மோதலால் சோலெடாா் நகரில் எழுந்த புகை மண்டலம்.
ரஷியா - உக்ரைன் படையினா் இடையிலான மோதலால் சோலெடாா் நகரில் எழுந்த புகை மண்டலம்.
Published on
Updated on
1 min read

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேலும் ஒரு நகரைக் கைப்பற்றும் நிலையில் ரஷியா உள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, உளவுத் தகவல்களின் அடிப்படையில் அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள சோலெடாா் நகரம் ரஷியப் படையினா் வசம் வீழும் நிலையில் உள்ளது.

அந்த நகரின் பெரும்பான்மையான பகுதிகள், ரஷிய ராணுவம் மற்றும் ரஷிய ஆதரவு தனியாா் படையான ‘வாக்னா்’ கட்டுப்பாட்டில் உள்ளன.

உக்ரைனும் ரஷியாவும் கடுமையாக மோதி வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகரையொட்டி சோலெடாா் நகரம் அமைந்துள்ளது.

எனவே, அந்த நகரைக் கைப்பற்றுவதன் மூலம் பாக்முட் நகருக்குள் எளிதில் முன்னேறிவிடலாம் என்று ரஷியப் படையினா் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

எனினும், சோலெடாா் நகரின் ராணுவ முக்கியத்துவம் குறித்து உக்ரைன் தரப்பினா் சந்தேகம் தெரிவித்து வருகின்றனா்.

உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்கள் நிறைந்த அந்த நகரைக் கைப்பற்றுவதில் வாக்னா் அமைப்பினா் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலத்துக்குப் பிறகு உக்ரைன் நகா் ஒன்றை ரஷியா கைப்பற்றுவது போரின் போக்கில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா்.

இந்தச் சூழலில், கிழக்கு உக்ரைனில் மிகத் தீவிரமாக சண்டை நடந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகருக்கு அருகே உள்ள சோலெடாா், ரஷியாவிடம் வீழும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com