50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை  நெருங்கும் பச்சை வால் நட்சத்திரம்!

மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை  நெருங்கும் பச்சை வால் நட்சத்திரம்!


மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த பச்சை வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் (நாசா) கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடித்தனர்.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வியாழனின் சுற்றுப்பாதையில் இருந்தபோது பனிக்கட்டி பார்வையாளர் பச்சை வால் நட்சத்திரத்தை முதன்முதலில் அறிந்ததாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கூற்றுப்படி, அரிதான இந்த பச்சை வால் நட்சத்திரத்துக்கு சி/2022 இ3 (இசட்.டி.எம்.) பெயரிட்டுள்ளது. வால் நட்சத்திரத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வுகளை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜனவரி 12 ஆம் தேதி சூரியனை நெருங்கி வரும் பச்சை வால் நட்சத்திரம் வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்றும், அந்த நேரத்தில் அது பூமியிலிருந்து சுமார் 2 கோடியே 60 லட்சம் மைல்கள் தொலைவில் இருக்கும் என்று பிளானெட்டரி சொசைட்டி தெரிவித்துள்ளது.

50 ஆயிரம் ஆண்டுகளில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் வால் நட்சத்திரம் இதுவாகும். இந்த வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் பூமியை நெருங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த அரிய பச்சை வால் நட்சத்திரம் வியாழன் முதல் வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பார்வையாளர்கள் தொலைநோக்கி இல்லாமலும், வால் நட்சத்திரம்  "வானத்தில் ஒரு மங்கலான, பச்சை நிற கசடு" போல் தோன்றும், அதே நேரத்தில் ஒரு சிறிய பச்சை நிற ஒளியை பகல் நேரங்களில் தொலைநோக்கி மூலமாகவும், இரவில் வெறும் கண்களாலும் பார்க்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

வால் நட்சத்திரம் வடமேற்கே நகரும்போது, காலை நேரத்தில் வானத்தில் வடக்கு அரைக்கோளத்தில் உள்ளவர்களுக்கு ஒரு பிரகாசமான பச்சை நிறத்தில் பளபளப்பாக தெரியும். தெற்கு அரைக்கோளத்தில் உள்ளவர்கள் பிப்ரவரியில் இதைக் காண முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.

 "வால் நட்சத்திரங்கள் கணிக்க முடியாதவை, ஆனால், இது பிரகாசத்தில் அதன் தற்போதைய போக்கைத் தொடர்ந்தால், அதைக் கண்டறிவது எளிதாக இருக்கும்" என்று நாசா இந்த மாத தொடக்கத்தில் தனது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தது. 

அரிய பச்சை வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி ஒரு சுற்றுப்பாதையை கொண்டுள்ளது. அது சூரிய மண்டலத்தின் வெளிப்புற பகுதிகள் வழியாக செல்கிறது. இதனால் தான் பூமியை சுற்றி வர நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி வர சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகும், எனவே அதைக் காணும் வாய்ப்பு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வரும் என்று கோள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com