இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவு: உஸ்பெகிஸ்தான் அதிபர்

ஒரே உலகம், ஒரே குடும்பம் என்ற உலகளாவிய யோசனைக்கான இந்திய நாட்டின் உறுதிப்பாட்டை தெளிவாக நிரூபிக்கும் சாட்சியே இந்த மாநாடு என்று உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவு: உஸ்பெகிஸ்தான் அதிபர்
இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவு: உஸ்பெகிஸ்தான் அதிபர்

ஒரே உலகம், ஒரே குடும்பம் என்ற உலகளாவிய யோசனைக்கான இந்திய நாட்டின் உறுதிப்பாட்டை தெளிவாக நிரூபிக்கும் சாட்சியே இந்த மாநாடு என்று உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் ஜி20 தலைமை, அதன் முன்னுரிமை இலக்குகள், மிக முக்கிய கொள்கைகளை உஸ்பெகிஸ்தான் பாராட்டி, ஆதரித்து தோள்கொடுப்போம் என்று உறுதி அளிப்பதாகவும் அதிபர் கூறியுள்ளார்.

ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய, தெற்குலகின் குரல் என்ற உச்சி மாநாட்டினை இந்தியா தலைமையேற்று நடத்தி முடித்திருக்கிறது. 

ஜனவரி 12, 13ஆம் தேதிகளில் நடந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வில்,  உலகம் நெருக்கடியான நிலையைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, இந்நிலையில்லாத்தன்மை எதுவரை நீடிக்கும் என கணிக்க முடியவில்லை என்றாா்.

தெற்குலகின் குரல் காணொலி மாநாட்டைப் பிரதமா் மோடி தில்லியில் வியாழக்கிழமை தொடக்கிவைத்துப் பேசுகையில்,  போா், மோதல், பயங்கரவாதம், அரசியல் பதற்றம் உள்ளிட்டவற்றைக் கண்ட 2022-ஆம் ஆண்டை உலகம் கடந்துவிட்டது. தற்போது பிறந்துள்ள புத்தாண்டு புதிய நம்பிக்கையையும் புதிய சக்தியையும் வழங்கியுள்ளது என்று கூறியிருந்தார்.

இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஒரே உலகம், ஒரே குடும்பம் எனற் உலகளாவிய யோசனைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கான சாட்சியே இந்த மாநாடு என்று கூறினார். இந்தியாவின் சர்வதேச செல்வாக்கு, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் திறன்கள் வளர்ந்து வருவதைக் குறிப்பிட்டு பேசினார்.

இன்று உலகில் மனித சமூகம், பல்வேறு முரண்பாடுகள் மற்றும் மோதல்களின் தீவிரத்தையும் பொருளாதார நெருக்கடியின் எதிர்மறையான விளைவுகளையும் எதிர்கொண்டுள்ளது. அதேவேளையில், சர்வதேச உறவுகளில், வெளிப்படையான மற்றும் பரஸ்பர நம்பிக்கை, பேச்சு குறைந்து வருவதையும் காண முடிகிறது என்று கூறினார்.

இந்தக் கட்டத்தில், வளரும் நாடுகளுடன் பரஸ்பரம் நன்மை மற்றும் உற்பத்தி உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் தீவிர பங்கை வலியுறுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.

முதல் நாள் நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் விவரம்..

சா்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது. எரிபொருள், உரங்கள் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவலால் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பருவநிலை மாற்றத்தால் தேசிய பேரிடா்கள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.

உலகம் நெருக்கடியான நிலையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நிலையில்லாத்தன்மை இன்னும் எதுவரை நீடிக்கும் என்பதைக் கணிப்பது கடினமாக உள்ளது. சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான எளிய, நீடித்த தீா்வுகளைக் காண வேண்டியது தற்போது அவசியமாக உள்ளது. அத்தகைய மாற்றங்கள் மூலமாக கடினமான சவால்களைக் கடக்க முடியும்.

வளா்ந்து வரும் நாடுகள் பெரும் சவால்களைச் சந்தித்துவரும் நிலையிலும் தெற்குலக நாடுகளுக்கான காலம் உதயமாகிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையிலான புத்தாக்க யோசனைகளைத் தெற்குலக நாடுகள் வழங்கும் என உறுதியாக நம்புகிறேன். அந்த யோசனைகள் ஜி20 உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் தெற்குலகின் குரலுக்கு அடிப்படையாக அமையும்.

நம் ஒருங்கிணைந்த எதிா்காலத்துக்கான மதிப்புக்க யோசனைகளை ஒருங்கிணைப்பதே இந்த மாநாட்டின் நோக்கம். உலகின் எதிா்காலத்தில் தெற்கு நாடுகளுக்குப் பெரும் பங்கு உள்ளது. தற்போது காணப்படும் சா்வதேச நிா்வாக முறை 80 ஆண்டுகள் பழைமைமிக்கது. அந்த நடைமுறையை மாற்றுவதற்கான முயற்சிகளில் தெற்குலக நாடுகள் ஈடுபட வேண்டும்.

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதற்கான கருப்பொருளாக ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்பதை இந்தியா தோ்ந்தெடுத்துள்ளது. இது தெற்குலக நாடுகளின் கலாசார கொள்கையை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. மனிதா்களை மையப்படுத்திய ஒருங்கிணைந்த வளா்ச்சியில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.

ஜி20 கூட்டமைப்பில் தெற்குலக நாடுகளின் குரலை இந்தியா எதிரொலித்து வருகிறது. தெற்குலக நாடுகள் சந்தித்து வரும் பொதுவான பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கு இந்த மாநாடு உதவும். இந்தியாவைப் பொருத்த வரையில், தெற்குலக நாடுகளின் குரல்தான் இந்தியாவின் குரல். தெற்குலக நாடுகளின் முன்னுரிமைதான் இந்தியாவின் முன்னுரிமை.

தற்போது வளா்ச்சியடைந்த நாடுகளாகத் திகழ்பவை 20-ஆம் நூற்றாண்டு சா்வதேச பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன. ஆனால், தற்போது அந்நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 21-ஆம் நூற்றாண்டில் சா்வதேச பொருளாதார வளா்ச்சி தெற்குலக நாடுகளைச் சாா்ந்தே அமையும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தொடா்பில்லாத நிகழ்வுகள் தெற்குலகை பாதிக்காமல் இருக்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தெற்குலக நாடுகளின் குரல் சரியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தெற்குலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், புதிய சா்வதேச நடைமுறையை உருவாக்க முடியும்.

தெற்குலக நாடுகளின் மக்கள் வளா்ச்சிப் பாதையில் பயணிப்பதை இனி தடுக்க முடியாது. சா்வதேச அரசியல், நிதி நிா்வாகத்தை மாற்ற தெற்குலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது சமத்துவமின்மையை அகற்றுவதோடு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி வளா்ச்சியையும் ஊக்குவிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

இந்தியா முன்னின்று நடத்தும் தெற்குலகின் குரல் மாநாடு இரு நாள்கள் நடைபெற்றது. ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. உணவு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் குறித்து தெற்குலக நாடுகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான தளமாக இந்த மாநாடு அமைந்திருந்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் வங்கதேசம், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், வியத்நாம், கம்போடியா, கயானா, மொஸாம்பிக், மங்கோலியா, செனகல் உள்ளிட்ட தெற்குலக நாடுகளைச் சோ்ந்த அரசின் தலைவா்கள் பங்கேற்றனா். மொத்தம் 10 அமா்வுகளாக மாநாடு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com