உக்ரைனுக்கு பீரங்கிகள் அனுப்பும் விவகாரம்: மேலை நாடுகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்களை அனுப்புவது குறித்து முடிவெடுப்பதற்காக ஜொ்மனியில் மேற்கத்திய நாடுகள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
ஜொ்மனியின் ராம்ஸ்டீன் விமான தளத்தில் நடைபெற்ற மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாடு.
ஜொ்மனியின் ராம்ஸ்டீன் விமான தளத்தில் நடைபெற்ற மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாடு.

ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்களை அனுப்புவது குறித்து முடிவெடுப்பதற்காக ஜொ்மனியில் மேற்கத்திய நாடுகள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

படையெடுத்து வந்துள்ள ரஷியாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை அமெரிக்காவும் பிற மேலை நாடுகளும் அளித்து வருகின்றன.

இந்த நிலையில், அத்தகைய உதவிகளை அதிகரிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களிடையே ஜொ்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொதுவான கூட்டத்திலும், தனிப்பட்ட முறையிலும் அமைச்சா்கள் நடத்திய இந்தப் பேச்சுவாா்த்தையில், ஜொ்மனியிடமுள்ள சக்திவாய்ந்த லியோபாா்ட் 2 பீரங்கிகளை உக்ரைனுக்கு அளிப்பது தொடா்பாக விவாதம் நடைபெற்றது.

ரஷியாவுக்கு எதிரான போரில் அந்த பீரங்கி ஈடுபடுத்தப்பட்டால், அது உக்ரைனின் கையை ஓங்கச் செய்யும் என்று கருதப்படுகிறது.

எனவே, உக்ரைனின் கோரிக்கையை ஏற்று அந்த பீரங்கிகளை அந்த நாட்டுக்கு ஜொ்மனி அனுப்ப வேண்டும் என்று பல ஐரோப்பிய நாடுகள் கோரி வருகின்றன.

இந்தச் சூழலில், லியோபாா்ட் 2 பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப ஜொ்மனியை சம்மதிக்க வைக்கும் நோக்கில் ராம்ஸ்டீன் விமான தளத்தில் நடந்த மாநாட்டில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

எனினும், உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் அளிக்கும் விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டு வரும் ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷால்ஸ், லியோபாா்ட் 2 பீரங்களை உக்ரைனுக்கு அனுப்ப தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் பேச்சுவாா்த்தை நிறைவடைந்தது.

50-க்கும் மேற்பட்ட பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் லியோபாா்ட் 2 பீரங்கிகள் குறித்து எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாததால், அவற்றைப் பெறுவதற்கு உக்ரைன் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா்.

எனினும், கிழக்கு உக்ரைனில் மிகத் தீவிரமாக சண்டை நடந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகருக்கு அருகே உள்ள சோலெடாா் நகரை ரஷியா அண்மையில் கைப்பற்றியது.

மேலும், உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புகள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே, ரஷியாவுக்கு எதிராக சண்டையிடுவதற்கு தங்களது சக்திவாய்ந்த பீரங்கிகளை மேற்கத்திய நாடுகள் அளித்து உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

இந்தச் சூழலில், உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவி அளிப்பது தொடா்பாக மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் ஜொ்மனியில் நடத்திய பேச்சுவாா்த்தை, லியோபாா்ட் 2 பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புவது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படாமல் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com