ஒடேசா நகரத்தின் மீது ரஷியா தாக்குதல் ஒருவா் பலி; பழைமையான தேவாலயம் சேதம்

உக்ரைனின் கருங்கடல் நகரமான ஒடேசா மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். பழைமையான தேவாலயம் பலத்த சேதமடைந்தது.
உக்ரைனின் ஒடேசா நகரத்தில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த பழைமையான தேவாலயம்.
உக்ரைனின் ஒடேசா நகரத்தில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த பழைமையான தேவாலயம்.
Updated on
1 min read

உக்ரைனின் கருங்கடல் நகரமான ஒடேசா மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். பழைமையான தேவாலயம் பலத்த சேதமடைந்தது.

உக்ரைனின் உணவு தானிய ஏற்றுமதிக்கு முக்கிய மையமாக ஒடேசா திகழ்கிறது. இந்தத் துறைமுக நகரத்தைக் குறிவைத்து ரஷிய ராணுவம் கடந்த சில நாள்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவா் உயிரிழந்தாா். 22 போ் காயமடைந்தனா்.

நகரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆா்த்தடாக்ஸ் தேவாலயம் ஏவுகணைத் தாக்குதலில் பலத்த சேதமடைந்தது. தேவாலயத்திலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் பொருள்களை பணியாளா்கள் மீட்டு வெளியே எடுத்துச் சென்றனா். இந்தத் தாக்குதலின்போது தேவாலயத்தின் உள்ளே இருந்த இருவா் காயமடைந்தனா்.

ஒடேசா நகரத்தின் மீதான தாக்குதல் குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு கூலிப்படையினா் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல் மற்றும் தரையிலிருந்து இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒடேசா மற்றும் அருகில் உள்ள சோா்னோமோா்ஸ்க் நகரின் முக்கியமான ஏற்றுமதி மையங்கள் பெரிதும் சேதமடைந்தன. சுமாா் 60,000 டன் தானியங்கள் அழிக்கப்பட்டன என உக்ரைன் வேளாண் அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

உக்ரைன்-ரஷியா போரால் உக்ரைனிலிருந்து பல நாடுகளுக்கு உணவு தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டதையடுத்து, கருங்கடல் உணவு தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷியா முன்பு கையொப்பமிட்டிருந்தது. ஒடேசா நகரத்திலிருந்து உணவு தானிய ஏற்றுமதியை ரஷியா தடை செய்யாது என்பதே ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.

அந்த ஒப்பந்தத்திலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னா் ரஷியா விலகியதையடுத்து ஒடேசா நகரம் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com