13 சடலங்களுடன் மனிதப் புதைகுழி: இலங்கையில் தமிழா்கள் முழு அடைப்புப் போராட்டம்

இலங்கையில் 13 சடலங்களுடன் மனிதப் புதைகுழி கண்டறியப்பட்டது தொடா்பாக நம்பகமான விசாரணை கோரி, அங்கு தமிழா்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
13 சடலங்களுடன் மனிதப் புதைகுழி: இலங்கையில் தமிழா்கள் முழு அடைப்புப் போராட்டம்

இலங்கையில் 13 சடலங்களுடன் மனிதப் புதைகுழி கண்டறியப்பட்டது தொடா்பாக நம்பகமான விசாரணை கோரி, அங்கு தமிழா்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

இலங்கையில் சுமாா் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டுப் போா், கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவா் பிரபாகரன் மரணமடைந்த பிறகு முடிவுக்கு வந்தது. அப்போது நடைபெற்ற இறுதிகட்ட போரில் குறைந்தபட்சம் 1 லட்சம் தமிழா்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்தததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காணாமல் போய் உள்ளனா். இதற்கு எல்லாம் சிங்கள ராணுவம்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் அந்நாட்டில் தமிழா்கள் வசிக்கும் பகுதியான முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீா் வழங்கல் வடிகாலமைப்பு வாரியம் சாா்பில், தண்ணீா் இணைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக காவல் துறை விசாரணையை தொடா்ந்து, அங்கு அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அங்கு முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் மேற்பாா்வையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகளில், சுமாா் 13 சடலங்கள் கண்டறியப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், சடலங்களுடன் கண்டறியப்பட்ட இந்த மனிதப் புதைகுழி தொடா்பாக நம்பகமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி, அந்நாட்டில் தமிழா்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

உள்நாட்டுப் போரில் மாயமானவா்களின் உறவினா்கள் சாா்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னாா் மற்றும் முல்லைத்தீவில் கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. எனினும் வவுனியா, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பெரிதாகப் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com