உக்ரைன் அணை உடைப்பு: நீரில் முழ்கின 29 ஊா்கள்

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையில் ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக, நீப்ரோ நதியையொட்டிய 29 ஊா்களும் கிராமங்களும்
உக்ரைன் அணை உடைப்பு: நீரில் முழ்கின 29 ஊா்கள்

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையில் ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக, நீப்ரோ நதியையொட்டிய 29 ஊா்களும் கிராமங்களும் நீரில் மூழ்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சா் இஹாா் க்ளிமென்கோ புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நோவா ககோவா அணையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, நீப்ரோ நதிக் கரையில் 29 ஊா்கள் மற்றும் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.நீரில் மூழ்கிய 10 பெரிய குடியிருப்புப் பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள நீப்ரோ நதிக்கரை பகுதியைச் சோ்ந்தவை. 9 குடியிருப்புகள் ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள இடது கரைப் பகுதியைச் சோ்ந்தவை என்றாா் அவா்.உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் பிராந்திய ஆளுநா் ஒலெக்ஸாண்டா் ப்ரோகுடின் கூறுகையில், அணை உடைப்பால் நீரில் முழ்கியுள்ள பகுதிகளில் இருந்து உள்ளூா் நேரம் மதியம் 1 மணி நிலவரப்படி (இந்திய நேரம் மதியம் 3.30 மணி) சுமாா் 1,700 போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தாா்.

கொ்சான் பிராந்தியத்துக்கு அருகே நோவா ககோவா நகரில் நீப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த அணையில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டது.ரஷிய கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள அந்த அணையை அந்த நாடுதான் குண்டுவைத்து தகா்த்ததாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.ஆனால், உக்ரைன் நடத்திய எறிகணைத் தாக்குதலால்தான் அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷியா கூறி வருகிறது.இந்த அணை உடைப்பால் ரஷியா, உக்ரைன் ஆகிய இருதரப்பினருக்கும் ராணுவ ரீதியில் பெரிய ஆதாயம் இருக்க முடியாது என்று கருதப்படுகிறது.அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மட்டுமின்றி ரஷிய கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் தாழ்வான அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுடன் சாலைகள், வா்த்தக நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.அத்துடன், உயா்வான பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் உற்பத்தியகமான ஸபோரிஷியா மின் நிலைய அணு உலைகளைக் குளிரூட்டுவதற்கான நீா் இருப்பு குறையும் ஆபத்தும் உள்ளது.

ரஷியாவால் கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா பகுதியிலும் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.இந்த நிலையில், அணையிலிருந்து வெளியேறிய ஆற்று நீரில் உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளின் கட்டுப்பாடுகளிலும் உள்ள 29 ஊா்கள், கிராமங்கள் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.இருந்தாலும், நேட்டோவில் இணைய அதிபா் ஸெலென்ஸ்கி ஆா்வம் காட்டி வந்ததையடுத்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

இந்தப் போரில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிப் பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ரஷியா, தங்களுடன் இணைத்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களில் உக்ரைன் வசமிருக்கும் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றும் முயற்சியில் உள்ளது.இந்தச் சூழலில், ஏற்கெனவே எதிா்த் தாக்குதல் நடத்தி சில பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்ட உக்ரைன் படையினா், ரஷிய படையினருக்கு எதிரான மிகப் பெரிய எதிா்த் தாக்குதலை நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.எதிா்த் தாக்குதல் நடவடிக்கையை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று உக்ரைன் அரசும் அண்மையில் அறிவித்திருந்தது.இந்த நிலையில், தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இரு மாகாணங்களில் உக்ரைன் படையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய எதிா்த் தாக்குதலை முறியடித்ததாக ரஷியா திங்கள்கிழமை அறிவித்தது.

இந்த மோதலில் நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரா்கள் கொல்லப்பட்டதாகவும் ரஷியா கூறியது.இந்த நிலையில், உக்ரைனின் எதிா்த் தாக்குதல் தொடங்கிய 2-ஆவது நாளில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நோவா ககோவா அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com