தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.
தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!


லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். பார்ட்டிகேட் விவகாரம் காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதிவியை ராஜிநாமா செய்துள்ளதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

2019 இல் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற போரிஸ் ஜான்சன், கரோனா தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், பிரதமர் போரிஸ் ஜான்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா கட்டுப்பாடுகளில் போரிஸ் ஜான்சன் காட்டிய அலட்சியப் போக்குக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் கூட விதிக்கப்பட்டது. இதன்மூலம் பிரிட்டனின் பிரதமராக இருக்கும் ஒருவர் மீது சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்படும் முதல் பிரதமராக அவர் ஆனார். 

இது மட்டுமன்றி பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான போரிஸ் ஜான்சனின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பின்சருக்கு துணை தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவங்களால் தொடர் குற்றச்சாட்டுக்கு போரிஸ் ஜான்சன் அரசு உள்ளான நிலையில் அவருக்கு நெருக்கடி முற்றியது.

இதன்காரணமாக அவரது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சஜித் ஜாவத் உள்ளிட்டோர் போரிஸ் ஜான்சனைக் கண்டித்து தனது பதவியை ராஜிநாமா செய்தனர். மேலும் அவரைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகத் திரும்பினர். 

இதையடுத்து கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த போரிஸ் ஜான்சன், அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தனது பிரதமர் பதவியையும் ராஜிநாமா செய்தார். 

இந்நிலையில், பார்ட்டிகேட் விவகாரம் காரணமாக, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதிவியை ராஜிநாமா செய்துள்ளார் போரிஸ் ஜான்சன்.

பார்ட்டிகேட் விவகாரத்தில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அந்த குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில், போர்ஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாகவும், இதனால் அவர் பத்து நாள்கள் வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய பரிந்துரை செய்திருந்தது. 

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளார் போரிஸ் ஜான்சான். 

தனது ராஜிநாமா குறிந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை குழுவிடம் இருந்து கடிதம் கிடைத்தவுடன், "எனக்கு எதிரான நடவடிக்கைகளைப் பயன்படுத்தி என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவது உறுதியாகியுள்ளது". நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவது மிகவும் வருத்தமாக உள்ளது. இது தற்காலிகமானது தான். குழு விசாரணையை "கங்காரு நீதிமன்றம்" என்று ஒப்பிட்டுள்ளார். 

"ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, ஹாரியட் ஹர்மன் தலைமையிலான ஒரு குழு, ஜனநாயக விரோதத்துடன் இவ்வளவு மோசமான சார்புடன் என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதை நினைத்து திகைத்துபோயுள்ளேன்". "நான் தெரிந்தோ அல்லது பொறுப்பற்றோ நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினேன் என்பதற்கான ஒரு சிறிய ஆதாரத்தையும் இன்னும் வெளியிடவில்லை". ஆனால், "ஆரம்பத்தில் இருந்தே,  உண்மைகள் எதுவாக இருந்தாலும், என்னைக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. எனினும், நான் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதிவியில் இருந்து விலகுகிறேன். இடைத்தேர்தலை சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

ஜான்சன் தனது ராஜிநாமா அறிக்கையில் ரிஷி சுனக் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளது பிரிட்டன் அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.

ஜான்சன் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அதன் விசாரணையை முடிக்க எம்.பி.க்கள் குழு திங்கள்கிழமை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com