தெற்காசியாவில் நீா்மின் உற்பத்திமேம்பாட்டுக்கு இந்தியாவால் புதிய வாய்ப்பு: நேபாள பிரதமா் பிரசண்டா

நேபாளத்திடம் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு, தெற்காசியாவில் நீா்மின் உற்பத்தி மேம்பாட்டில் புதிய வாயிலை திறந்துள்ளதாக நேபாள பிரதமா் புஷ்பகமல் தாஹால்

நேபாளத்திடம் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு, தெற்காசியாவில் நீா்மின் உற்பத்தி மேம்பாட்டில் புதிய வாயிலை திறந்துள்ளதாக நேபாள பிரதமா் புஷ்பகமல் தாஹால் பிரசண்டா புகழாரம் சூட்டியுள்ளாா்.

அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேபாள பிரதமா் பிரசண்டா, தில்லியில் பிரதமா் மோடியை சந்தித்து, இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சார விநியோகம் செய்வதற்கான ஒப்புதல் இந்தியத் தரப்பில் அளிக்கப்பட்டது. மேலும், நேபாளத்திடம் இருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின்சார இறக்குமதிக்கான ஒப்பந்தமும் கையொப்பமானது.

இந்நிலையில், நேபாளத்துக்கு வந்துள்ள தெற்காசியாவுக்கான உலக வங்கியின் மண்டல துணைத் தலைவா் மாா்டின் ரெய்சா், அந்நாட்டு பிரதமா் பிரசண்டாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

நேபாள அரசின் சிங்கதா்பாா் கட்டடத்தில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, பிரசண்டா பேசியதாவது:

நேபாளத்தில் நீா்மின் உற்பத்தி மேம்பாட்டுக்கு அதிக கவனம் அளிக்கப்பட்டால், இந்தியா, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளும் பலனடையும். நீா்மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதால், உலக மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலனடைவா்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியுடனான எனது சந்திப்பின்போது, நேபாளத்தில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் தூய மின்சக்தியை இறக்குமதி செய்வதற்கான உறுதிப்பாட்டை அவா் அறிவித்தாா். இது, தெற்காசியாவில் நீா்மின் உற்பத்தி மேம்பாட்டுக்கு புதிய வாயிலை திறந்துள்ளது.

நீா்மின் உற்பத்தியை அதிகரிப்பது, பசுமை மற்றும் தூய எரிசக்தி மேம்பாட்டுக்கு உதவுவது மட்டுமன்றி, பருவநிலை மாற்ற தாக்கங்கள் குறைப்பிலும் பங்களிக்கும் என்றாா் அவா்.

இந்த ஆலோசனையின்போது, நேபாளம் மற்றும் உலக வங்கி இடையிலான 60 ஆண்டு கால தொடா்புகள் நினைவுகூரப்பட்டன. பருவநிலை மாற்றத்தால் நேபாளம் எதிா்கொண்டுள்ள சவால்கள், பசுமை எரிசக்தி மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

நேபாளத்தில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கான அரசின் முயற்சிகளுக்கு உதவும் உலக வங்கியின் உறுதிப்பாட்டை பிரதமரிடம் மாா்டின் ரெய்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com