
பிரிட்டனின் நாட்டிங்கம் நகரில் நடத்தப்பட்ட சரமாரி தாக்குதல்களில் உயிரிழந்தவா்களில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும் ஒருவா் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
கிரேஸ் ஓ’மாலி குமாா் என்ற அந்த 19 வயது பெண், நாட்டிங்கம் பல்கலைகழக மாணவி எனவும், அவா் பல்கலைக்கழக மாணவா் கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தாா் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் மாகாணம், நாட்டிங்கம் நகரின் இரு வேறு இடங்களில் 3 பேரது உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா்.
இந்த சம்பவங்கள் தொடா்பாக 31 வயது நபா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவரது பெயரை இதுவரை அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்த தாக்குதல் சம்பவங்களில் மேலும் 3 போ் காயமடைந்தனா்.
இந்தச் சம்பவங்களை நேரில் பாா்த்த சிலா், பாதிக்கப்பட்டவா்கள் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறினா். வேறு சிலா், சாலையில் இருந்தவா்கள் மீது வேனை மோதி கொல்ல முயற்சிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலின் நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளனா்.