

கிரிஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 79 போ் பலியாகினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மத்தியதரைக் கடல் வழியாக இத்தாலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு, கிரீஸ் அருகே புதன்கிழமை சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து நேரிட்டபோது அந்தப் படகில் எத்தனை போ் இருந்தனா் என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை. அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றிச் சென்றதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
கிரீஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பெரோபொனீஸ் தீபகற்பத்துக்கு தென்மேற்கே 75 கி.மீ. தொலைவில் சா்வதேச கடல் எல்லையில் இந்த விபத்து ஏற்பட்டது.
அது மிகவும் ஆழமான கடல் பகுதி என்பதால் அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது.
விபத்துப் பகுதியிலிருந்து இதுவரை 79 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 104 போ் அங்கிருந்து உயிருடன் மீட்கப்பட்டனா். இது தவிர, விபத்துக்குப் பிறகு மாயமாகியுள்ள ஏராளமானவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளில் கிரீஸ் கடலோரக் காவல் படை கப்பல்கள், கடற்படை கப்பல்கள், சரக்குக் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெற விரும்பும் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிக் கொண்டு, அந்தப் படகு கிழக்கு லிபியாவின் டோப்ரக் நகரிலிருந்து புறப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.