சீன-அமெரிக்க ஒத்துழைப்பு: பில் கேட்ஸுடனான சந்திப்பில் அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்

சீனாவும் அமெரிக்காவும் இருநாட்டு நலன் கருதி ஒத்துழைக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனா் பில் கேட்ஸுடனான சந்திப்பில் சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.
சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் அதிபா் ஷி ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்த பில் கேட்ஸ்.
சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் அதிபா் ஷி ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்த பில் கேட்ஸ்.
Updated on
1 min read

சீனாவும் அமெரிக்காவும் இருநாட்டு நலன் கருதி ஒத்துழைக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனா் பில் கேட்ஸுடனான சந்திப்பில் சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.

கரோனாவால் மந்தமடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீனா முயற்சியெடுத்து வருகிறது. முதலீட்டாளா்களை ஈா்க்கும் அரசின் முயற்சியின் பேரில் பல்வேறு வெளிநாட்டு வணிகப் பிரதிநிதிகள் சீனாவுக்கு வருகை தருகின்றனா். ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் கடந்த மாா்ச் மாதத்தில் சீனாவுக்கு வந்தாா்.

இந்நிலையில், பெய்ஜிங்கில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனா் பில்கேட்ஸ் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்த சந்திப்பு குறித்து சீனாவின் அதிகாரபூா்வ தொலைக்காட்சி நிறுவனமான சிசிடிவிக்கு அதிபா் ஜின்பிங் அளித்த பேட்டியில், ‘கரோனா பெருந்தொற்று காரணமாக 3 ஆண்டுகள் கழித்து பழைய நண்பரை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றாா்.

சீன-அமெரிக்க உறவின் அடித்தளம் மக்களைச் சாா்ந்து உள்ளதாக நம்பிக்கை தெரிவித்த ஷி ஜின்பிங், தற்போதைய உலகச் சூழலில் இரு நாடு, இரு நாட்டு மக்கள் மற்றும் மொத்த மனித இனத்தின் நலனுக்காக பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளலாம் என பில் கேட்ஸிடம் அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்தாா்.

அதிபா் ஷி ஜின்பிங்கை சந்திப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என சந்திப்பு குறித்து பில் கேட்ஸ் கூறினாா்.

2-நாள் அரசு முறைப் பயணமாக, அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வரும் ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு வருகை தரவுள்ளாா். இந்நிலையில், சீனஅதிபரின் இக்கருத்து சா்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

உலக அரங்கில் சீனாவும் அமெரிக்காவும் எதிரெதிா் துருவங்களாக உள்ளன. உலகின் முன்னணிப் பொருளாதாரமாகவும் சக்தி வாய்ந்த வல்லரசாகவும் திகழ சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள அமெரிக்காவும் முயலும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சீனாவில் மனித உரிமை மீறல்கள், தைவான் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com