மோடியிடம் கேள்வி: அமெரிக்க பெண் பத்திரிகையாளருக்கு டார்ச்சர்! வெள்ளை மாளிகை கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறுபான்மையினர் குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க பெண் பத்திரிகையாளரை துன்புறுத்தும் நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
சப்ரினா சித்திக்கி
சப்ரினா சித்திக்கி


அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறுபான்மையினர் குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க பெண் பத்திரிகையாளரை துன்புறுத்தும் நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கிக்கு எதிரான துன்புறுத்தல்கள், 'மிக மோசமான ஆன்லைன் துன்புறுத்தல்' என்றும் வெள்ளை மாளிகை தனது கண்டனத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள்கள் அமெரிக்க பயணத்தின்போது, ஜூன் 22ஆம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, வெள்ளை மாளிகைக்கான வால் ஸ்ட்ரீட் இதழின் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கி, இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்த நிலையில், சிறுபான்மையினர் குறித்து கேள்வி எழுப்பியிருந்த பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கியை, சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாக துன்புறுத்தும் நடவடிக்கைகள் நிகழ்ந்துவருகின்றன.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தரவுகளின் தொடர்புத்துறை தலைவர் ஜான் கிர்பை, பெண் பத்திரிகையாளர் துன்புறுத்தப்படுவது தொடர்பான தகவல்கள் வெள்ளை மாளிகைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இது ஏற்றுக்கொள்ளமுடியாதது, இதுபோன்று, பத்திரிகையாளர்கள் எங்கும், எந்தச் சூழலிலும் துன்புறுத்தப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது, கடந்த வாரம், நடைபெற்ற பயணத்தின்போது வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கிர்பையின் அறிக்கையைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் கரைன் ஜீன்-பியர்ரியும் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டியது அவசியம், அதனால்தான் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எனவே, எந்தவொரு பத்திரிகையாளரும், தனது கடமையைச் செய்ததற்காக மிரட்டப்படுவதையோ அல்லது துன்புறுத்தப்படுவதையோ எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது, கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு, ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதை முக்கியமாகக் கருதுகிறது. எனவேதான், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் மற்றும் இந்திய பிரதமர் இருவரும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டியது முக்கியம் என்று வெள்ளை மாளிகை கருதியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக செய்தியாளர்களை சந்திப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. அப்படி ஒரு நிகழ்வு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

சப்ரினா சித்திகி
சப்ரினா சித்திகி

இந்த செய்தியாளர் சந்திப்பில், வால் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கி பிரதமர் நரேந்திர மோடியிடம், "இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமா்சிப்பவா்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும்  பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீா்கள்?' என்று கேள்வி எழுப்பினார். 

இந்தக் கேள்வியை கேட்டதும் ஆச்சரியமடைந்த பிரதமர் மோடி, அதிபா் பைடன் கூறியதுபோல், இந்தியா மற்றும்  அமெரிக்காவின் மரபணுவில் ஜனநாயகம் உள்ளது. இந்திய அரசமைப்புச்  சட்டத்தில் ஜனநாயகம் உள்ளது. இந்தியாவின் முன்னோா்கள் அரசமைப்புச் சட்டம் குறித்து எங்களுக்குக் கற்பித்துள்ளனா். அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகளை இந்திய அரசு பின்பற்றுகிறது. எனவே பாகுபாடுகளுக்கு முற்றிலும் இடமில்லை என்று பதிலளித்திருந்தார். 

பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியாளர் சந்திப்பு எவ்வாறு முக்கியத்துவம் பெற்றதோ, அதுபோல, சித்திக்கி எழுப்பிய கேள்வியும் அதிமுக்கியத்துவம் பெற்றது.

ஆனால், இது பாஜக தொழில்நுட்பக் குழுத் தலைவர் அமித் மாளவியாவால் சர்ச்சையாக்கப்பட்டது. பெண் பத்திரிகையாளர் சித்திக்கின் கேள்வி பின்னணி கொண்டது என்றும், டூல்கிட் கும்பல் பயன்படுத்துவதைப் போன்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பின்னணி கொண்ட இந்த கேள்வியை, பிரதமர் நரேந்திர மோடி தனது பதிலால் தவிடுபொடியாக்கிவிட்டார் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இந்துத்துவா ஆதரவாளர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்களின் டிவிட்டர் பக்கங்களில், தொடர்ந்து சபரினா சித்திக்கி குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் ஒரு பாகிஸ்தானி இஸ்லாமியவாதி என்றும், இவர் இந்தியாவை குறிவைத்தே கேள்வி எழுப்பினார் என்றும், வெறுப்பு என்பது பாகிஸ்தானியர்களின் மரபணுவிலேயே உள்ளது என்றும் பலவாறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

அதோடு நிற்காமல், பாகிஸ்தானிய பெற்றோருக்குப் பிறந்தவர், இவரது கேள்வி இஸ்லாமியர்களின் கூற்றுகளை எதிரொலிப்பதாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

தன்னை ஒரு இந்திய எதிர்ப்பு நபராகக் காட்டும் சமூக ஊடகக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், சித்திக்கி, தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய கிரிக்கெட் அணியினரின் வெற்றிக் கொண்டாட்டத்தை இந்தியாவில் பிறந்த தந்தையுடன் கொண்டாடும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

மேலும், சிலர் எனது தனிப்பட்ட பின்னணியை இங்கே அடையாளப்படுத்தத் தேர்ந்தெடுத்திருப்பதால், ஒரு முழுமையான படத்தை அளிப்பது மட்டுமே சரியானது. சில நேரங்களில் அடையாளங்கள் தோற்றத்தில் இருப்பதைவிடவும் மிகவும் சிக்கலானவை என்றும் அவர் அந்த புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இவருக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவு கரத்தை நீட்டியிருக்கிறது. ஒரு பத்திரிகையாளராக சித்திக்கி தனது பணியை மிகச் சிறப்பாக செய்ததாக அது பாராட்டியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன், பல முன்னணி நிறுவன பத்திரிகையாளர்களும், பிரதமர் நரேந்திர மோடியிடம் மிகக் கடினமானக் கேள்வியை எழுப்பியதற்காக பாராட்டுகளையும் ஆதரவையும் ஒருசேர பதிவிட்டு வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com