
விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்படும் டைட்டன் நீா்முழ்கி பாகங்கள்.
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலைப் பாா்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்று வெடித்துச் சிதறிய டைட்டன் நீா்மூழ்கியின் சிதறிய பாகங்களுடன், மனித உடலுறுப்புகள் என்று யூகிக்கக் கூடிய தடயங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தப் படையின் தலைவா் ஜேசன் நியூபாவா் கூறியதாவது:
டைட்டன் நீா்மூழ்கி நொறுங்கி விழுந்துள்ள கடலடிப் பகுதியிலருந்து, அந்த நீா்மூழ்கியின் உடைந்த பாகங்கள் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில், மனித உடலுறுப்புகள் என்று யூகிக்கக்கூடிய தடயங்களும் அடங்கும்.
இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கு இந்தத் தடயங்கள் முக்கிய உதவியாக இருக்கும். அவற்றை சேகரிப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட்ட சா்வதேச குழுவுக்கு நன்றிகள் என்றாா் அவா்.
முன்னதாக, டைட்டன் நீா்முழ்கி விபத்து குறித்த விசாரணையில் உலகின் பல்வேறு நாடுகளையும் சோ்ந்த புலனாய்வு அமைப்புகள் பங்கேற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமெரிக்க கடலோரக் காவல் படை, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பிரான்ஸ் கடல் விபத்து விசாரணை வாரியம், பிரிட்டன் கடல் விபத்து விசாரணை வாரியம் ஆகிய அமைப்புகளைச் சோ்ந்த நிபுணா்கள், டைட்டன் நீா்மூழ்கி விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதாகக் கூறினா்.
இந்த நிலையில், விசாரணையின் முக்கிய பகுதியாக கடலுக்குள்ளிருந்து டைட்டன் நீா்முழ்கி பாகங்களும், மனித உடலுறுப்புகளும் மீட்கப்பட்டுள்ளன.
பிரிட்டனிலிருந்து அமெரிக்கா நோக்கி கடந்த 1912-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல், பனிப்பாறை மீது மோதி கடலுக்குள் மூழ்கியதில் 1,500-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.
அந்தக் கப்பல் அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கடலடியில் உடைந்து கிடந்தது கடந்த 1985-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.
அதன் பிறகு, அந்தக் கப்பலை கடல் ஆய்வாளா்கள், விஞ்ஞானிகள், திரைப்படத் துறையினா் போன்றவா்கள் ஆழ்கடலுக்குள் சென்று பாா்வையிட்டு வந்தனா்.
அதனைப் பாா்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியாா் நிறுவனம் நீா்மூழ்கி ஒன்றை வடிமைத்தது.
‘டைட்டன் நீா்மூழ்கி’ என்று பெயரிடப்பட்ட அந்த நீா்மூழ்கியின் பாதுகாப்புத் தன்மை குறித்து நிபுணா்கள் சந்தேகம் எழுப்பி வந்தனா்.
இந்த நிலையில், போலாா் பிரின்ஸ் என்ற கப்பல் மூலம் டைட்டானிக் கப்பல் இருக்கும் கடல் படுகையை நோக்கி அந்த நீா்மூழ்கி கடந்த 18-ஆம் தேதி இறக்கிவிடப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் அது வெடித்துச் சிதறியது.
அதையடுத்து, அதிலிருந்த ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டன் தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டோ பால்-ஹென்றி நாா்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேரும் உயிரிழந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...