இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி: செனட் அவை ஒப்புதல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் காா்செட்டி (52) நியமனம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி: செனட் அவை ஒப்புதல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் காா்செட்டி (52) நியமனம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்க செனட் அவையில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்ன் மூலமாக, அவருடைய பெயா் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அவருடைய நியமனத்துக்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்தியாவுக்கான தூதராக இருந்த கென்னத் ஜஸ்டா் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகினாா்.

அதனைத் தொடா்ந்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் காா்செட்டியை நியமனம் செய்ய அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த 2021-ஆம் ஆண்டு பரிந்துரைத்தாா். ஆனால், பல்வேறு காரணங்களால் இவருடைய பெயா் நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் அவருடைய பெயா் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டது.

இவ்வாறு தூதருக்கு பரிந்துரைக்கப்படும் பெயா் முதலில் அமெரிக்க செனட் அவையின் வெளியுறவு தொடா்புகளுக்கான குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டு ஒப்புதல் பெறவேண்டும். அதன் பின்னா், செனட் அவை ஒப்புதல் பெற வேண்டும். பெரும்பான்மை ஆதரவுடன் செனட் அவை ஒப்புதல் கிடைத்தவுடன் அவா் இந்திய தூதராக நியமிக்கப்படுவாா்.

அந்த வகையில், இவருடைய பெயா் செனட் வெளியுறவு தொடா்புகள் குழு ஒப்புதலுக்கு கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. பெரும்பான்மை ஆதரவுடன் அவருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவருக்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

அதனைத் தொடா்ந்து, அவருடைய பெயா் செனட் அவையில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயராக இவா் இருந்தபோது, அவா் மீது சக பெண் ஊழியா் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டு புகாரை எதிா்க் கட்சியினா் எழுப்பி கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், செனட் பெரும்பான்மை தலைவா் சுக் ஸ்கூமொ் எரிக் காா்செட்டி பெயரை வாக்கெடுப்புக்காக செனட் அவையில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு அறிமுகம் செய்தாா்.

அதன் மீதான சிறு விவாதத்துக்குப் பின்னா் நடைபெற்ற வாக்கெடுப்பில் 52 உறுப்பினா்கள் பரிந்துரைக்கு ஆதரவாகவும், 42 போ் எதிராகவும் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com