
டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் கழிவறையில் காவல் அதிகாரி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் பிரதமரின் அலுவலகம் தலைநகர் டோக்கியோவில் உள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள கழிறையில் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 வயது அதிகாரியான அவர் கழிவறையில் தலையில் இருந்து ரத்தம் வழிந்து நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
காவல் அதிகாரி உடல் அருகே தரையில் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்றும மேலும் அதில் இருந்து தோட்டா ஒன்று சுடப்பட்டு இருந்ததாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பலியான அதிகாரி யுடா குரோகாவா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனது அலுவலகத்தில் இல்லை என்றும் ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூருக்கு ஒரு வாரகால சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தால் பிரதமர் அலுவலத்தில் பரபரப்பு நிலவியது.