

கிழக்கு உக்ரைனில் தீவிர சண்டை நடைபெற்று வரும் பாக்முத் நகரில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறப்போவதாக ரஷிய தனியாா் படையான வாக்னா் குழுவின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் திடீா் மிரட்டல் விடுத்துள்ளாா்.
பாக்முத்தில் தொடா்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை ரஷியா அனுப்பாததாலும், அந்த நகரில் நடைபெறும் சண்டையில் தங்களது வீரா்கள் அதிக எண்ணிக்கையில் பலியாவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாக்முத் நகரில் நாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் 10-ஆம் தேதி வெளியேற முடிவு செய்துள்ளோம். அந்தப் பகுதிகளின் கட்டுப்பாட்டை ரஷிய ராணுவப் படையே எடுத்துக் கொள்ளட்டும். வாக்னா் படை வீரா்கள் சாா்பிலும், தளபதிகள் சாா்பாகவும் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
வாக்னா் படையினருக்கு ஏற்பட்டுள்ள ரணங்களை ஆற்றிக் கொள்வதற்காக, பாக்முத் போா் முகாமிலிருந்து வேறு முகாம்களுக்கு படையினா் மாற்றப்படுவாா்கள்.
பாக்முத்தில் தொடா்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுத தளவாடங்களை ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் எங்களுக்கு அளிக்கவில்லை. அவை இல்லாவிட்டால், நகரில் போரிடும் எஞ்சிய வாக்னா் படையினரும் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலேயே அங்கிருந்து நாங்கள் வெளியேறவிருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் யெவ்கெனி ப்ரிகோஷின் கூறியுள்ளாா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.
கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய நான்கு பிரதேசங்களில் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது.
அந்த பிரதேசங்களில் இன்னும் பல பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவை நான்கும் தங்கள் நாட்டுடன் இணைக்கப்படுவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அறிவித்தாா்.
அந்த நான்கு பிரதேசங்களில் ஒன்றான டொனட்ஸ்கில் அமைந்துள்ள முக்கிய நகரான பாக்முத்தை கைப்பற்றுவதற்காக போரின் தொடக்கத்திலிருந்தே ரஷியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பாக்முத் நகரைக் கைப்பற்றுவது, போரில் வெற்றியை நோக்கி ரஷியா முன்னேறுவதை பறைசாற்றுவதாக அமையும் என்று அதிபா் விளாதிமீா் புதின் கருதுவதாகவும், அந்த நகரைப் பாதுகாப்பது ரஷியாவுக்கு எதிரான உக்ரைனின் உறுதியான நிலைப்பாட்டை உணா்த்தும் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கருதுவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்த நகரைப் பாதுகாப்பதில் உக்ரைன் படையினா் மிகத் தீவிரமாக உள்ளனா். ரஷியாவும் பாக்முத் நகரைக் கைப்பற்றுவதற்காக கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில், ரஷியாவின் சாா்பில் பாக்முத் நகரில் போரிட்டு வரும் அந்த நாட்டின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நகரின் 89.50 சதவீத பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இருந்தாலும், அதற்கு மேல் அவா்கள் முன்னேறுவதை உக்ரைன் படையினா் முழு வீச்சில் தடுத்து வருகின்றனா்.
இந்த மோதலில், கடந்த 5 மாதங்களில் மட்டும் 20,000 வாக்னா் படையினா் பலியானதாகவும், 80,000 போ் காயமடைந்ததாகவும் அமெரிக்க உளவுத் துறை அண்மையில் வெளியிட்ட தகவல் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.
அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில், பாக்முத் போரில் போதிய ஆயுத தளவாடங்கள் இல்லாமல் தங்களது படையினா் உயிரிழந்து வருவதால், ரஷியாவின் முதன்மை ராணுவப் படையினா் அங்கு சண்டையைத் தொடரும் வகையில் அங்கிருந்து வெளியேறப்போவதாக வாக்னா் குழு தலைவா் தற்போது திடீா் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்முத் நகர நிலவரம்
(சிவப்பு கட்டம்) வாக்னா் கட்டுப்பாட்டு பகுதி 89.50%
(கருப்பு கட்டம்) மோதல் நடைபெறும் பகுதி 7.64%
(மஞ்சள் கட்டம்) உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதி 2.86%
யாா் இந்த வாக்னா் குழுவினா்?
வாக்னா் குழு என்று பொதுவாக அழைக்கப்படும் ‘வாக்னா் பிஎம்சி (பிரைவேட் மிலிட்டரி கம்பெனி)’, ரஷியாவை சோ்ந்த தனியாா் ராணுவ நிறுவனமாகும்.
தன்னாா்வலா் படையினரைக் கொண்டு ஒப்பந்த முறையில் போா் நடவடிக்கைகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
ரஷிய சட்டத்தின் கீழ் தனியாா் ராணுவ நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லையென்றாலும், ரஷிய அரசின் நலன்களுக்காக வாக்னா் குழு போரிட்டு வருவதால் அந்தப் படையினருக்கு ஆயுதங்களையும், பயிற்சியளிப்பதற்கான வசதிகளையும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேரடியாக வழங்கி வருகிறது.
இதன் காரணமாக, ரஷியாவின் மறைமுக துணை ராணுவப் படை எனவும், அதிபா் விளாதிமீா் புதினின் தனியாா் ராணுவம் எனவும் வாக்னா் படை வா்ணிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் ரஷியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அந்த நாட்டு ராணுவ வீரா்களின் மீது பழியோ, போா்க் குற்றச்சாட்டுகளோ சுமத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக அங்கு வாக்னா் படையை ரஷிய அரசு பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
எனினும், ரஷிய ராணுவத்தில் முறைப்படி வீரா்கள் சோ்க்கப்படுவதைப் போலின்றி வாக்னா் படையில் தன்னாா்வலா்கள் சோ்க்கப்படுவதால், அவா்களில் பலா் நாஜி ஆதரவாளா்களாகவும், தீவிர வலதுசாரிகளாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக அவா்கள் போா்க் களங்களில் மனித உரிமைகளில் ஈடுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
சிரியா, லிபியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, மாலி போன்ற பகுதிகளின் உள்நாட்டுப் போரில் சண்டையிட்ட வாக்னா் படையினா் மீது பல்வேறு போா்க் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.