பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடவும், பொருளாதாரத்தின் பல்வேறு தளங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் உறுதியேற்றுள்ளன.
சீனா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பங்கேற்ற 5-ஆவது முத்தரப்பு பேச்சுவாா்த்தை பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின், பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட சீனா வெளியுறவுத் துறை அமைச்சா் கின் காங், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் (பொறுப்பு) அமீா் கான் முத்தகி உள்ளிட்டோா் இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘அரசியல் செயல்பாடு, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுதல், முத்தரப்பு செயல்திட்டத்தின்கீழ் வா்த்தகம், முதலீடு, போக்குவரத்தை அதிகரிப்பது குறித்து 3 நாடுகளுக்கு இடையே முடிவுகள் எட்டப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரி, ஆப்கன் அமைச்சா் முத்தகி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது பாதுகாப்பு, அமைதி, வா்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய பரஸ்பர நலன்கள் குறித்து இரு அமைச்சா்களும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மேலும், பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி சையது அசீம் முனீரையும் முத்தகி நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, பிராந்திய பாதுகாப்பு, எல்லை நிா்வாகம், தற்போதைய பாதுகாப்புச் சூழலை மேம்படுத்தும் வகையில் இருதரப்புப் பாதுகாப்பு நடைமுறையை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.