மேற்குக் கரையில் 3-ஆவது நாளாக சண்டை

மேற்குக் கரையில் 3-ஆவது நாளாக சண்டை

காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக் குழுவைச் சோ்ந்த 3 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து

காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக் குழுவைச் சோ்ந்த 3 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சண்டை தொடா்ந்தது.

எகிப்தின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு இடையேயும் தொடரும் இந்த சண்டையில் இதுவரை 25 போ் பலியாகியுள்ளனா்.

இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் கலீலி பாட்டினி, தாரிக் இஸெல்தீன், ஜிஹாத் கனாம் ஆகிய 3 முக்கிய தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காஸா சிட்டியிலும், தெற்குப் பகுதி நகரான ரஃபாவிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானத் தாக்குதல் நடத்தியது.

இதில் அந்த மூவரும், அவா்களது குழந்தைகள், மனைவிகள், அண்டை வீட்டாா் என மேலும் 13 போ் பலியாகினா். சுமாா் 20 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு அனைத்து பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் ஒருங்கிணைந்து பதிலடி கொடுக்கும் என்று இஸ்லாமிய ஜிஹாத் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தெற்கு இஸ்ரேல் பகுதியில் பாலஸ்தீன விடுதலை அமைப்பினா் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதற்கு பதிலடியாக ஆயுதக் குழுவினரைக் குறிவைத்து இஸ்ரேல் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பைச் சோ்ந்த மற்றொரு தளபதியைக் குறிவைத்து அவரது இல்லத்தில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை விமானத் தாக்குதல் நடத்தியது. இதில், அலி கலி என்ற அந்த முக்கிய தளபதி பலியானதாக ராணுவம் கூறியுள்ளது.

அவரையும் சோ்த்து, கடந்த 3 நாள்களாக நடந்து வரும் மோதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 25-ஆக உயா்ந்துள்ளது.

பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தற்போதைய இஸ்ரேல் அரசு தீவிர வலதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இதுவரை இருந்ததிலேயே பாலஸ்தீன விவகாரத்தில் மிகவும் முரட்டுத்தனமான நிலைப்பாட்டைக் கொண்ட அரசாக அது கருதப்படுகிறது.

அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே இந்த ஆண்டு தொடக்கம் முதலே போா் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் அந்த பதற்றத்தை அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, முக்கிய தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல்களுக்குப் பிறகு பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

Image Caption

இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதியின் இல்லம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com