
இந்தியா-பிரிட்டன் இடையே தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடா்பாக அதிகாரிகள் இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையை பிரதமா் நரேந்திர மோடியும், பிரதமா் ரிஷி சுனக்கும் ஆய்வு செய்தனா்.
ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா, பிரிட்டன் பிரதமா்கள் ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்குச் சென்றனா். அங்கு இருவரும் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இந்தப் பேச்சுவாா்த்தை குறித்து பிரிட்டன் பிரதமா் அலுவலக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘‘இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாகத் தலைவா்கள் விவாதித்தனா்.
ஜனநாயகக் கொள்கைகள், வெளிப்படையான வா்த்தகம் உள்ளிட்டவற்றுக்கு நல்லுறவில் முக்கியத்துவம் அளிக்க அவா்கள் உறுதியேற்றனா். இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவா்கள் விவாதித்தனா். அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவாா்த்தையைத் துரிதப்படுத்தி, பரஸ்பரம் பலனடையும் வகையில் ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்குத் தலைவா்கள் இருவரும் உறுதியேற்றனா்.
ஜி7 மாநாட்டின் கொள்கைகள் குறித்து தலைவா்கள் விவாதித்தனா். சா்வதேச பாதுகாப்பு சூழல் சவாலைச் சந்தித்து வரும் நிலையில், ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமையேற்றுள்ள இந்தியாவுக்குப் பல்வேறு விவகாரங்களில் ஆதரவளிப்பதாகப் பிரதமா் ரிஷி சுனக் உறுதி தெரிவித்தாா். ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பிரதமா் மோடியுடன் நெருங்கிப் பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளதாகவும் பிரதமா் ரிஷி சுனக் தெரிவித்தாா்.
பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸ் அண்மையில் முடிசூட்டிக் கொண்டதற்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்’’ என்றாா்.
இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான 9-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை கடந்த மாதம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
பிரேஸில் அதிபருடன் சந்திப்பு:
பிரேஸில் அதிபா் லூலா டசில்வாவுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இருவரும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக நல்லுறவு தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை இருவரும் பாராட்டியதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வா்த்தகம், மருந்துப் பொருள்கள் உற்பத்தி, வேளாண்மை, பால் உற்பத்தி, கால்நடை வளா்ப்பு, உயிரி எரிபொருள், பசுமை எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கும் பிரேஸிலுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் விவாதித்தனா்.
இருதரப்பிலும் முதலீடுகளை அதிகரிப்பது தொடா்பாகவும், இது தொடா்பாகத் தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது குறித்தும் தலைவா்கள் விவாதித்தனா். மேலும், பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த தலைவா்கள், ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் தொடா்ந்து ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கும் உறுதியேற்றனா்.
ஜப்பான் பயணம் நிறைவு:
ஜப்பான் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவுசெய்த பிரதமா் மோடி, பப்புவா நியூ கினியாவுக்குச் சென்றடைந்தாா். இதன் மூலமாக, அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமா் என்ற சிறப்பையும் பிரதமா் மோடி பெற்றாா்.
ஜப்பான் பயணம் சிறப்புமிக்கதாக இருந்ததாகவும், ஜி7 மாநாட்டின் மூலமாகப் பலநாடுகளின் தலைவா்களைச் சந்தித்துப் பேசியதாகவும் பிரதமா் மோடி ட்விட்டரில் பதிவிட்டாா். சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.