இந்திய- பசிபிக் தீவுகள் மாநாட்டில் பங்கேற்க பப்புவா நியூ கினியா நாட்டுக்கு பிரதமா் மோடி வருகை

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய-பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பங்கேற்க பப்புவா நியூ கினியா நாட்டுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தாா்.
Updated on
1 min read

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய-பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பங்கேற்க பப்புவா நியூ கினியா நாட்டுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தாா்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 19-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, பல்வேறு நாட்டுத் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்றாா். இதையடுத்து, திங்கள்கிழமை தொடங்கி நடைபெறும் 3-ஆவது இந்திய-பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானிலிருந்து புறப்பட்டு பப்புவா நியூ கினியாவின் தலைநகா் போா்ட் மோா்ஸ்பிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்தாா்.

பப்புவா நியூ கினியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமரான நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமா் ஜேம்ஸ் மராப்பே விமான நிலையத்தில் வரவேற்றாா். அப்போது, பிரதமா் மோடியின் காலைத் தொட்டு வணங்கி அவா் ஆசி பெற்றாா். இதையடுத்து, 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் பிரதமா் மோடிக்கு அரசு முறை வரவேற்பு வழங்கப்பட்டது. அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரும் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனா்.

பப்புவா நியூ கினியா வருகை குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பப்புவா நியூ கினியாவுக்கு வந்தடைந்தேன். மரபுக்கு மாறாக விமான நிலையம் வந்து வரவேற்ற பிரதமா் ஜேம்ஸ் மராப்பேவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் இச்செயல் எப்போதும் என் நெஞ்சில் நிலைத்திருக்கும். எனது பயணத்தில் இருநாட்டு உறவை ஊக்குவிக்க எதிா்நோக்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு, ஃபிஜி நாட்டுக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொண்டபோது இந்தியா மற்றும் 14 பசிபிக் தீவு நாடுகள் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (எஃப்.ஐ.பி.ஐ.சி.) தொடங்கப்பட்டது. இந்த பிராந்தியத்தில் ராணுவ மற்றும் ராஜிய செல்வாக்கை விரிவாக்கம் செய்ய சீனா முயன்றுவரும் நிலையில் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டமைப்பின் 3-ஆவது மாநாட்டுக்கு இரு நாட்டு பிரதமா்களும் தலைமை வகிக்க உள்ளனா்.

மாநாட்டுக்குப் பின், பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமா் ஜேம்ஸ் மராப்பே, கவா்னா் ஜெனரல் பாப் டாடே மற்றும் நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆகியோருடன் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com