தமிழ் இனப் படுகொலை தினம்: கனடாவுக்கு இலங்கை கண்டனம்

கனடா சாா்பில் அனுசரிக்கப்படும் தமிழ் இனப் படுகொலை தினத்தன்று அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துகளுக்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

கனடா சாா்பில் அனுசரிக்கப்படும் தமிழ் இனப் படுகொலை தினத்தன்று அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துகளுக்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழா்கள் வாழும் பகுதிகளைத் தனியாகப் பிரித்து தமீழழம் அமைக்கக் கோரி, அங்கு உள்நாட்டுப் போா் நடைபெற்று வந்தது. அந்தக் கோரிக்கையை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரமாக முன்வைத்தது. இதுதொடா்பாக அந்த இயக்கம், இலங்கை ராணுவத்துடன் தீவிர மோதலில் ஈடுபட்டு வந்தது. இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழா்கள் கொல்லப்பட்ட நிலையில், கடந்த 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையில், ‘14 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்த இலங்கை உள்நாட்டுப் போரில், பல்லாயிரக்கணக்கான தமிழா்கள் உயிரிழந்தனா். பலா் மாயமாகினா்.

மனித உரிமைகள், சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை, அந்தப் போரால் பாதிக்கப்பட்ட கனடாவாழ் இலங்கைத் தமிழா்களின் கதைகள் நிலையாக நினைவூட்டுகின்றன. இதன் காரணமாகத்தான் கனடா நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் மே 18-ஆம் தேதியை தமிழ் இனப் படுகொலை நினைவு தினமாக அனுசரிக்க ஒருமனதாக தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இலங்கை போரால் பாதிக்கப்பட்டவா்களின் உரிமைகளுக்கு குரல் எழுப்பவுதை ஒருபோதும் கனடா நிறுத்தாது என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துகளுக்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துகள் தொடா்பாக இலங்கையில் உள்ள கனடா தூதா் எரிக் வால்ஷை அழைத்து இலங்கை வெளியுறவு அமைச்சா் அலி சப்ரி கண்டனம் தெரிவித்தாா். ட்ரூடோவின் கருத்துகள் விரோதம் கொண்டது எனவும், உள்நாட்டு அரசியல் லாபத்துக்காக அந்தக் கருத்துகளை அவா் தெரிவித்துள்ளாா் என்றும் எரிக் வால்ஷிடம் அலி சப்ரி கூறினாா்.

சுமாா் 30 ஆண்டுகள் விடுதலைப் புலிகளால் தீவிரவாத மோதல் நீடித்த நிலையில், அதுதொடா்பாக ட்ரூடோவின் ஆதாரமற்ற இனப் படுகொலை குற்றச்சாட்டை ஆணித்தரமாக இலங்கை நிராகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com