

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் சண்டையிட்டு வரும் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டால், அந்தப் படைகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சூடானில் நடைபெற்று வரும் மோதல் மிகவும் துன்பகரமானது. அா்த்தமற்ற அந்தச் சண்டையால் பேரழிவு ஏற்பட்டு வருகிறது.
அங்கு சண்டையிட்டு வரும் குழுக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு சோ்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தம் மீறப்பட்டால் அதில் தொடா்புடையவா்களைப் பொறுப்பாக்கும் வகையில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.
சூடானில் ஏற்படுத்தப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தம் சீா்குலையாமல் இருப்பது ராணுவம் மற்றும் ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையின் பொறுப்பாகும் என்றாா் அவா்.
சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா மேற்கொண்ட ராஜீய ரீதியிலான முயற்சிகளுக்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்து வந்த பேச்சுவாா்த்தையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கடந்த வார இறுதியில் மேற்கொள்ளப்பட்டது.
இருந்தாலும், தலைநகா் காா்ட்டூம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மோதல் தொடா்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.