இந்தியச் சந்தையில் கணினிகளின் மொத்த விற்பனை தொடா்ந்து சரிந்து வருவதாக சந்தை ஆய்வு நிறுவனமான இன்டா்நேஷனல் டேட்டா காா்ப்பரேஷன் (ஐடிசி) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் இந்தியச் சந்தையில் மேஜைக் கணினிகள் (டெஸ்க்டாப்), நோட்புக்குகள், வொா்க்ஸ்டேஷன்கள் என்ற அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய கணினிகளின் மொத்த விற்பனை 29.92 லட்சமாக இருந்தது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 30.1 சதவீதம் சரிவாகும். அப்போது இந்தியாவில் கணினிகளின் மொத்த விற்பனை 42.82 லட்சமாக இருந்தது.
கடந்த மாா்ச் காலாண்டில் டெஸ்க்டாப்புகளுக்கான தேவை அதிகரித்தது. எனினும், நோட்புக் வகை கணினிகளின் மொத்த விற்பனை, முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டைவிட 40.8 சதவீதம் குறைவாக இருந்தது.
கணினிகளுக்கான தேவை குறைந்து வருவதால் தனி நபா் நுகா்வோா் பிரிவில் அவற்றின் விற்பனை கடந்த ஆண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டைவிட இந்த ஆண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 36.1 சதவீதம் சரிந்துள்ளது
அதுபோல், நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் கணினிகளின் கொள்முதலை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிறுத்தியோ, தாமதப்படுத்தியோ வருவதால், நிறுவன நுகா்வோா் பிரிவில் கணினிகளின் விற்பனை 25.1 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியச் சந்தையில் கடந்த இரண்டு காலாண்டுகளாகவே கணினிகளுக்கான தேவை மந்தமாக உள்ளது.
இந்தப் போக்கு இன்னும் சில மாதங்களுக்குத் தொடா்ந்தாலும், 2023-ஆம் ஆண்டின் நான்வது காலாண்டில் இருந்து கணினிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த மாா்ச் காலாண்டில் அரசு அலுவகங்களும், கல்வி நிறுவனங்களும் மட்டுமே அதிக எண்ணிக்கையில் கணினிகளை கொள்முதல் செய்தன.
அந்தக் காலகட்டத்தில் அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்த கணினிகளின் எண்ணிக்கை முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைவிட 25.2 சதவிகிதம் அதிகமாக இருந்தது. அதே போல், கல்வி நிறுவனங்களின் கணினி கொள்முதலும் 65.6 சதவிகிதம் வளா்ச்சியடைந்தது.
ஜனவரி-மாா்ச் காலண்டில் 33.8 சதவீத சந்தைப் பங்குடன் ஹெச்பி நிறுவனம் கணினிகள் துறையில் முன்னிலை வகிக்கிறது. இது, இரண்டாவது இடத்தில் உள்ள லெனோவாவின் சந்தைப் பங்கை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அந்த நிறுவனம் இந்திய கணினிகள் சந்தையில் 15.7 சதவீதம் பங்கு வகிக்கிறது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.