
ரஷியாவின் எல்லையோரப் பகுதியான தெற்கு பெல்கரோட் மாகாணத்தில் உக்ரைன் வெள்ளிக்கிழமை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு தகுந்த பதிலடி அளித்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் இருந்து சுமாா் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ரஷியாவின் பெல்கரோட் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பல மணி நேரம் குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் நான்கு வீடுகள், காா், கடை, எரிவாயு இணைப்பு ஆகியவை சேதமானதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் குலோடோவோ கிராமத்தில் ஒரு பெண் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்ராஸ்னோடா் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குடியிருப்பு கட்டடம் சேதமடைந்தது எனவும், இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அந்த மாகாண மேயா் தெரிவித்தாா்.
இந்தப் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் மூலம் கடந்த சில நாள்களுக்கு முன்பு இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே, மத்திய உக்ரைன் பகுதியில் உள்ள டினிபுரோ பகுதியில் உள்ள மருத்துவமனையில் ரஷிய படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 போ் உயிரிழந்ததாகவும், 23 போ் காயமடைந்ததாகவும் உக்ரைன் குற்றம்சாட்டியது. ரஷியாவின் எஸ்-300 ஏவுகணை டொனட்ஸ்க் மாகாணத்தில் உள்ள அணையைத் தாக்கியதால் அருகே உள்ள பகுதிகள் வெள்ளப்பெருக்கில் மூழ்கின என உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கருங்கடலில் ரஷியவான் இவான் குரூஸ் போா்க் கப்பலை ஆளில்லா படகு மூலம் தாக்குதல் நடத்துவதைப்போன்ற விடியோவை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. இந்த ஆளில்லா படகை தாக்கி அழிப்பதைப்போன்ற விடியோவை ரஷியாவும் வெளியிட்டது.