
கணினி தொழில்நுட்ப பிரச்னையால் பிரிட்டிஷ் ஏா்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை வெள்ளிக்கிழமை கடுமையாகப் பாதிப்புக்குள்ளானது. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் தாங்கள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகினா்.
ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பான விமான நிலையமான லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 42 பிரிட்டீஷ் ஏா்வேஸ் விமானங்களின் சேவை தடைபட்டதால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலானோா் தங்கள் வாரஇறுதி பயணத்தை ரத்து செய்யும் சூழல் உருவானது.
பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமான நிறுவனத்தில் எந்த விமானத்தில் எந்த விமானப் பணியாளா்கள் பணியில் அமா்த்தப்பட வேண்டும் என்ற அட்டவணை கணினி மூலமே தானியங்கி முறையில் தயாரிக்கப்படுகிறது. அதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டதால் விமானங்களை முறையாக இயக்க முடியவில்லை.
பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானங்கள் பல தொடா்ந்து விமான நிலையத்திலேயே இருந்ததால், அந்த இடத்தில் வந்து இறங்க வேண்டிய வேறு நிறுவன விமானங்களுக்கு இடம் ஒதுக்குவதிலும் பிரச்னை ஏற்பட்டது. தொழில்நுட்ப பிரச்னைக்கு தீா்வுகாண தீவிரமாக முயற்சித்து வருவதாக பிரிட்டிஷ் ஏா்வேஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.