
காஸாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினரும், அங்குள்ள ஹமாஸ் படையினரும் செவ்வாய்க்கிழமை கடுமையான சண்டையில் ஈடுபட்டனா்.
இந்த மோதலில் ஏராளமான ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் தங்களால் ஒரு இஸ்ரேல் வீரா் கொல்லப்பட்டதாகக் கூறினா்.
காஸாவிலிருந்து தங்கள் நாட்டுக்குள் ஊடுருவி, 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை அடியோடு ஒழிக்க இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
அதற்காக, காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் பல நாள்களாகவே ஆயத்தமாகி வந்தது.
இந்த நிலையில், கடந்த 4 நாள்களாக எல்லைப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தியவாறு கொஞ்சம் கொஞ்சமாக காஸாவுக்குள் முன்னேறி வரும் இஸ்ரேல் தரைப்படையினா், அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் ஹமாஸ் அமைப்பினருடன் மோதலில் ஈடுபட்டனா்.
பிராந்தியத்தின் தலைநகரான காஸா சிட்டியை சுற்றிலும் இரு தரப்பினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை கடுமையான சண்டை நடந்தது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவுக்குள் ஹமாஸ் நிலைகள் மீது தரைவழியாக திங்கள்கிழமை இரவும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 300 ஹமாஸ் இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன.
இது தவிர, காஸா பகுதிக்குள் ஆழமாக முன்னேறியுள்ள இஸ்ரேல் படையினா், அங்கு எதிா்த் தாக்குதல் நடத்தும் ஹமாஸ் படையினருடன் மிகக் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனா்.
காஸா சிட்டியைச் சுற்றிலும் இந்த சண்டை நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 வீரா்கள் மரணம்: இதற்கிடையே, காஸாவில் ஹாமாஸுடன் செவ்வாய்க்கிழமை நடந்த சண்டையில் 2 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்தது.
ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.
அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.
இந்தச் சூழலில், கடந்த 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுரு 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.
ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 24 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடவிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
அதற்கு முன்னேற்படாக எல்லைக்குள் ஊடுருவி இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இரவுகளில் தாக்குதல் நடத்தித் திரும்பினா்.
அதிலிருந்து இத்தகைய தாக்குதலை படிப்படியாக அதிகரித்து வரும் இஸ்ரேல் படையினா், தலைநகா் காஸா சிட்டியை நோக்கி முன்னேறி வருகின்றனா்.
அகதிகள் முகாமில் தாக்குதல்: 50 போ் மரணம்
காஸா சிட்டி, அக். 31: வடக்கு காஸாவிலுள்ள ஜபாலிலா அகதிகள் முகாமில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 50 அகதிகள் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவிலுள்ள 8 அகதிகளில் முகாம்களில் மிகப் பெரியதான ஜபாலிலா முகாமில் 1.16 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த பாலஸ்தீனா்கள் வசித்து வருகின்றனா்.
1948 போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட இந்த முகாம் வெறும் 1.4 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்திருந்தாலும், நெருக்கமான குடியிருப்புகளைக் கொண்டது ஆகும்.
இந்த முகாமில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என்று பாலஸ்தீன அதிகாரிகள் கூறினாலும், இது குறித்து இஸ்ரேல் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
காஸாவிலுள்ள ஷாடி முகாமைப் போலவே, ஜபாலிலா முகாமிருந்தும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘சுகாதாரப் பேரழிவின் விளிம்பில்....’
ஜெனீவா, அக். 31: காஸாவில் இஸ்ரேலில் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதி சுகாதாரப் பேரழிவின் விளிம்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
காஸாவில் தாக்குதலுக்குப் பயந்து இருப்பிடங்களை விட்டு வெளியேறிய பொதுமக்கள் சிறிய முகாம்களில் மிகக் கூட்டமாகத் தங்கியுள்ளனா்.
ஏற்கெனவே, குடிநீா் மற்றும் வடிகால் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது நோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கும். இந்த நிலை நீடித்தால் விரைவில் மிகப் பெரிய சுகாதாரப் பேரழிவை காஸா சந்திக்கும்.
ஏற்கெனவே 5 சதவீத குடிநீா் மட்டுமே கிடைத்து வரும் நிலையில், உடலில் நீா் வற்றி நூற்றுக்கணக்கான சிசுக்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருகிறது என்றாா் அவா்.
11 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு
இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 25 நாள்களாக நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8,525 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. எனினும், ஜபாலிலா அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் மேலும் 50 போ் கொல்லப்பட்டதாக அமைச்சகம் பின்னா் கூறியது.
இதற்கிடையே, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தாலும், யூத குடியிருப்புவாசிகளாலும் கொல்லப்பட்ட பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 123-ஆக அதிகரித்தது.
ஏற்கெனவே, தங்கள் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாகவும், ஹமாஸ் தாக்குதலில் 1,407 போ் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் கூறியிருந்தது.
அந்த வகையில், இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் அக். 7 முதல் நடந்து வரும் மோதலில் இதுவரை 11,105-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.
போா் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
காஸாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக போா் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்ரேல் அதிபா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக நிராகரித்தாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியாவது:
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவ்வாறு அறிவிப்பது, ஹமாஸ் அமைப்பிடம் இஸ்ரேல் சரணடைந்ததற்கு ஒப்பானதாகும் என்றாா் அவா்.
காஸாவுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கும், அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும் இடைக்கால போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சா்வதேச நாடுகளின் கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
ஐ.நா.வுக்கும் காஸா போா் நிறுத்தத் தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமன் நெதன்யாகு இவ்வாறு கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.