தகவல் தொடர்புகளை மீண்டும் இழந்தது காஸா - உள்நுழையும் இஸ்ரேலிய வீரர்கள்!

காஸா பகுதியின் தகவல் தொடர்புகள் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிய வீரர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவிற்குள் நுழைவார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் தொடர்புகளை மீண்டும் இழந்தது காஸா - உள்நுழையும் இஸ்ரேலிய வீரர்கள்!

ஹமாஸின் ஆட்சிக்கு உள்பட்ட  காஸாவை வடக்கு, தெற்கு எனப் பிரித்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸா நகரத்திற்குள் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நுழைவார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் போர் தொடங்கியதிலிருந்து மூன்றாவது முறையாக காஸாப் பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று பாலஸ்தீனத்தின் அகதிக் குடியிருப்புகள் மற்றும் மத்திய காஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குலில் பல உயிர்கள் பறிபோயிருப்பதாக காஸாவின் மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதநேயம் கருதி போரை தற்காலிக நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அனைத்து யோசனைகளையும் இஸ்ரேல் மறுத்துவிட்டது. காஸாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி பல உயிர்களைக் கொன்றுக் குவித்துவருகிறது. கடந்த ஞாயிறு அன்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஆன்டனி பிளிங்கன் முன்னறிவிப்பு எதுவுமின்றி பாலஸ்தீன அதிபரைச் சந்திக்க ரமல்லாவிற்கு சென்றது குறிப்பிடத் தக்கது. பின்னர் இராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுன்டேவைச் சந்திக்க இராக் தலைநகர் பாக்தாத்திற்கும் சென்றுள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 9700 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறார் மற்றும் குழந்தைகள் என காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை மேற்குக் கரையில் மட்டும் 140-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களின் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தப் போரானது கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் போராளிகளால் துவங்கப்பட்டது. இதுவரை இஸ்ரேலில் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவினர் 242 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர்.

மேலும் அமெரிக்கா, எகிப்து, இஸ்ரேல், கத்தார் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் மூலம் காஸாவிலிருந்து ரஃபா எல்லை வழியாக இதுவரை 1100 பேர் வெளியேறியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com