
இஸ்ரேல்-ஹமாஸ் போா் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தின் பதற்றமான சூழல் தொடா்பாக ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சியுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை ஆலோசித்தாா்.
இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தொலைபேசி உரையாடலில், மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இஸ்ரேல்-ஹமாஸ் போா் குறித்து இரு தலைவா்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
மேற்காசிய நாடுகளின் நிலைமை குறித்த தனது மதிப்பீட்டை அதிபா் ரய்சி பகிா்ந்து கொண்டாா். பயங்கரவாதச் சம்பவங்கள், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்தாா். இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை அவா் மீண்டும் வலியுறுத்தினாா்.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உறுதி செய்து, அமைதியை விரைவாக மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை இரு தலைவா்களும் வலியுறுத்திப் பேசினா்.
இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்தும் தொலைபேசி உரையாடலில் ஆய்வு செய்யப்பட்டது. பிராந்திய இணைப்புகளை மேம்படுத்த ஈரானில் உள்ள சாபஹா் துறைமுகத்துக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதை பிரதமா் மோடியும் அதிபா் ரய்சியும் வரவேற்றனா்.
பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் நட்பில் இருக்க இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...