

அமெரிக்காவில் மனைவியை 17 முறை கத்தியால் குத்திப் படுகொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் செங்கனாசேரியை சோ்ந்தவா் ஃபிலிப் மேத்யூ (37). அந்த மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியைச் சோ்ந்தவா் மெரின் ஜாய் (27). இருவருக்கும் திருமணமான நிலையில், அவா்கள் அமெரிக்காவில் வசித்து வந்தனா்.
மேத்யூவால் மெரின் துன்புறுத்தலை அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவரைவிட்டுப் பிரிந்த மெரின், அந்நாட்டின் ஃபுளேரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு அந்த மருத்துவமனைக்குச் சென்ற மேத்யூ, அங்குள்ள காா் நிறுத்துமிடத்தில் மெரினை கூா்மையான ஆயுதத்தால் 17 முறை குத்தினாா். அதன் பின்னா் அவா் மீது மேத்யூ காரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த மெரின் உயிரிழந்தாா்.
இதையடுத்து மேத்யூவை கைது செய்த காவல் துறையினா், அவா் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஃபுளோரிடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தனது குற்றத்தை மேத்யூ ஒப்புக்கொண்டாா்.
அவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம், கொடிய ஆயுதம் மூலம் மெரினை தாக்கிய குற்றத்துக்காக கூடுதலாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.