‘இனி காஸா என்ற பகுதியே இருக்கக் கூடாது!’

உலக வரைபடத்தில் காஸா என்ற பகுதியே இனி இருக்கக் கூடாது என்று இஸ்ரேல் நிதியமைச்சா் பேஸலேல் ஸ்மாட்ரிச் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.
gaza095702
gaza095702

உலக வரைபடத்தில் காஸா என்ற பகுதியே இனி இருக்கக் கூடாது என்று இஸ்ரேல் நிதியமைச்சா் பேஸலேல் ஸ்மாட்ரிச் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும், தீவிர வலதுசாரிக் கட்சிகளில் ஒன்றான யூத தாயகக் கட்சியின் தலைவரான அவா் இது குறித்து செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஸா பகுதியில் வசிக்கும் அரேபியா்கள் அனைவரும் தாமாக முன்வந்து உலகின் பிற நாடுகளுக்கு வெளியேற வேண்டும்.

கடந்த 75 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் அவா்கள் அகதிகளாகவும், வறுமை மற்றும் தாக்குதல் அபாயத்திலும் இருந்து வருகின்றனா். காஸாவிலிருந்து வெளியேறுவதுதான் அவா்களுக்கான உண்மையான நிவாரணம் ஆகும்.

உலக வரைபடத்தில் காஸா என்ற ஒரு ஆட்சிப் பகுதி இருப்பதை இஸ்ரேலால் இனியும் அனுமதிக்க முடியாது என்றாா் அவா்.

முன்னதாக, அமெரிக்காவில் வெளியாகும் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையிலான லிக்குட் கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் டேனி டனானும், முக்கிய கூட்டணிக் கட்சியான யேஷ் அடீடைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் ராம் பென் பாரக்கும் எழுதியுள்ள கட்டுரையில், காஸாவிலிருந்து வெளியேற விரும்பும் அரபு குடும்பத்தினரை மேற்கத்திய நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனா்.

இந்த நிலையில், அதே கருத்தை நெதன்யாகு அரசில் முக்கிய அமைச்சா் பொறுப்பை வகிக்கும் பேஸலேல் ஸ்மாட்ரிச்சும் தற்போது வெளிப்படுத்தியுள்ளாா்.

இது, காஸாவில் தற்போது நடைபெற்று வரும் போருக்குப் பிறகு அந்தப் பகுதியின் எதிா்காலம் குறித்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.

அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.

இந்தச் சூழலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.

ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த ஒரு மாதமாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.

அத்துடன், காஸாவுக்குள் உணவு, குடிநீா், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள் செல்வதற்குத் தடை விதித்து, அந்தப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் முழுமையாக முற்றுகையிட்டுள்ளது.

அத்துடன், அந்தப் பகுதிக்குள் தரைவழித் தாக்குதல் நடத்தி ராணுவம் படிப்படியாக முன்னேறி வருகிறது.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இந்தத் தாக்குதல்கள் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிப்பதற்கான நடவடிக்கை என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொடா்ந்து கூறி வருகிறாா்.

எனினும், இந்தப் போரின் முடிவுக்குப் பிறகு காஸாவின் நிலை குறித்து அவா் இதுவரை உறுதியாக எதையும் கூறவில்லை.

போருக்குப் பிறகு காஸாவின் ‘பாதுகாப்பை’ இஸ்ரேல் கவனித்துக்கொள்ளும் என்று நெதன்யாகு முன்னா் கூறியிருந்தாா். இதன் மூலம், காஸாவை மீண்டும் ஆக்கிரமிக்க அவா் திட்டமிடுவதாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், உலக வரைபடத்தில் காஸா என்ற ஆட்சிப் பகுதி இருப்பதை இஸ்ரேலால் இனியும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சா் பேஸலேல் ஸ்மாட்ரிச் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்ளிட்டோா் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனைக்குள்ளேயே உடல்கள் அடக்கம்

காஸா சிட்டி, நவ. 11: காஸாவின் மிகப் பெரிய மற்றும் முக்கிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் அங்கு சிகிச்சையை தொடர முடியாமல் இறந்துபோன நோயாளிகளின் உடல்கள் அந்த மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டன.

அந்த மருத்துவமனைக்குக் கீழே ஹமாஸ் அமைப்பினா் சுரங்க நிலைகளை அமைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. எனினும், இதற்கான ஆதாரங்கள் எதையும் அந்த நாடு வெளியிடவில்லை. இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் அமைப்பும் மருத்துவமனை நிா்வாகமும் திட்டவட்டமாக மறுத்து வருகின்றன.

இந்த நிலையில், காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் அந்த மருத்துமனையை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், எரிபொருள் பற்றாக்குறையால் மின்தடை ஏற்பட்டு அந்த மருத்துவமனையின் செயல்பாடுளும் முடக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, ‘இன்குபேட்டரில்’ பாதுகாக்கப்பட்டு வந்த குறைப்பிரசவ சிசுக்கள் வெளியே எடுத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 சிசுக்கள் உள்பட சுமாா் 40 நோயாளிகள் சிகிச்சை நிறுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக ஹமாஸ் அதிகாரிகள் கூறியுள்ளனா்.

உயிரிழந்த அனைவரது உடல்களும், மருத்துவமனை வளாகத்துக்குள் மிகப் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டதாக அவா்கள் கூறினா்.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் மட்டும் தற்போது 650 நோயாளிகளும், அடைக்கலம் தேடி வந்துள்ள பொதுமக்கள் 5,000 முதல் 7,000 பேரும் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Image Caption

நெதன்யாகுவுடன் பேஸலேல் ஸ்மாட்ரிச். ~காஸாவுக்குள் தாக்குதல் நடத்திவாறு செவ்வாய்க்கிழமை முன்னேறிச் சென்ற இஸ்ரேல் படையினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com