இஸ்ரேலுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கக் கூடாதா? ஹாலிவுட்டில் இரு கலைஞர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!

இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுத்த ஆஸ்கர் விருது வென்ற நடிகை உள்பட இருவர் தாங்கள் நடித்துவந்த படங்களிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெலிசா பாரேரா, சூசன் சரண்டன்
மெலிசா பாரேரா, சூசன் சரண்டன்
Published on
Updated on
2 min read

இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுத்த ஆஸ்கர் விருது வென்ற நடிகை உள்பட இருவர் தாங்கள் நடித்துவந்த படங்களிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. ஹமாஸை அழிக்க சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸா மீது நடத்தி வரும் தாக்குலில் குழந்தைகள், பெண்கள் உள்பட இதுவரை 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உள்பட பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆஸ்கர் விருது வென்ற சூசன் சரண்டன் மற்றும் ஸ்கிரீம் படத்தின் நாயகி மெலிசா பாரேரா ஆகியோர் தாங்கள் நடித்து வரும் படங்களிலிருந்து தயாரிப்பு நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவரும், ஒருமுறை ஆஸ்கர் விருது வென்றவருமான சூசன், யுனிடட் டேலண்ட் ஏஜென்சி தயாரிப்பில் நடித்து வந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க்கில் கடந்த வாரம் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்ட சூசன், “இந்த நேரத்தில், யூதர்களாக இருக்கவே பயப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதாவது நமது நாட்டில் முஸ்லிம்கள் எப்படி பயப்படுவார்களோ அதுபோல, மேலும் அவ்வப்போது அவர்கள் வன்முறைக்கும் ஆளாகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக சுதந்திரப் பாலஸ்தீனத்துக்கான முழக்கத்தை எழுப்பிய சூசன், “இஸ்ரேலுக்கு எதிராக பேசுவதில் யூதர்கள் குழப்பமடைந்துள்ளனர். நான் மதவெறிக்கு எதிரானவள். இஸ்லாமிய எதிர்ப்புக்கு எதிரானவள்.” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், யூதர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சூசனை படத்திலிருந்து நீக்குவதாக தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதேபோல், இஸ்ரேலுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்ட ஹாலிவுட் நடிகை மெலிசா பாரேராவை, ஸ்கிரீம் 7 படத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்பைகிளாஸ் மீடியா குரூப் நீக்கியுள்ளது.

மெக்ஸிகோவை சேர்ந்த மெலிசா, ஸ்க்ரீம் 5 மற்றும் 7-ஆம் பாகங்களிலும், ‘இன் தி ஹயிட்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து பதிவிட்ட மெலிசா, இனப்படுகொலை மற்றும் இன அழிப்பை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாகவும், காஸாவை வதம் செய்யும் முகாம்களாக மாற்றியுள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.

மெலிசாவின் பதிவை தொடர்ந்து, அவரை ஸ்க்ரீம் படத்தில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், “இனப்படுகொலை குறித்து தவறான உதாரணத்தை கூறி, வெறுப்பைத் தூண்டுவதை நாங்கள் சகித்துக் கொள்ளமுடியாது” என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள மெலிசா, “நான் மதவெறி மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களைதான் கண்டிக்கிறேன். எந்தவொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை கண்டிக்கிறேன். வன்முறையில் மேலும் மரணம் ஏற்படாமல் அமைதி நிலவ இரவும், பகலும் பிரார்த்திக்கிறேன்.  தேவைப்படுபவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். அமைதி, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவேன்.” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஹாலிவுட் நடிகர்களை அச்சுறுத்தும் தயாரிப்பு நிறுவனங்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com