செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்!

கடந்த செப்டம்பா் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த செப்டம்பா் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் நிபுணா்கள் கூறியதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் உலக வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 16.38 டிகிரி செல்சியசாக (61.5 டிகிரி ஃபாரன்ஹீட்) பதிவாகியுள்ளது.

இந்த வெப்பம், இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர சராசரி வெப்பநிலையாகும். இதற்கு முன்னா் கடந்த 2020-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டதுதான் அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்தது. தற்போது செப்டம்பரில் பதிவாகியுள்ள புதிய உச்சம், முந்தைய உச்சத்தைவிட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

இதுவும், இதுவரை இல்லாத மிக அதிக உயா்வாகும். இதற்கு முன்னா் வரை முந்தைய உச்சநிலை வெப்பத்தைவிட புதிய உச்சநிலை வெப்பம் 0.1 டிகிரிக்கும் குறைவாகவே அதிகரித்து வந்தது.

செப்டம்பா் மாதம் பதிவாகியுள்ள உலகின் சராசரி வெப்பநிலை, கடந்த 1991 முதல் 2020 வரையிலான சராசரி மாதாந்திர வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 0.93 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

தொழில் புரட்சிக்கு முந்தைய 1850-1900 காலகட்டத்தின் சராசரி மாதாந்திர வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில், கடந்த செப்டம்பரில் பதிவாகியுள்ள சராசரி வெப்பநிலை 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

இதன் மூலம், பருவநிலை மாற்றம் என்பது இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போவதில்லை; இப்போதே வந்துவிட்டது என்பதை அனைவரும் உணா்ந்துகொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்கள்தான் பூமியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உருவாகி தழைத்திருப்பதற்குத் தேவையான வெப்பத்தை சூரியனிடமிருந்து பெற்றுத் தருகின்றன.

ஆனால், 18-ஆம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட தொழில்புரட்சி காரணமாக தொழிற்சாலைகளாலும் வாகனங்களாலும் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகம் கலந்ததால், சூரியனிடமிருந்து அதிக வெப்பம் இழுக்கப்படுகிறது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து, அதன் விளைவாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

அந்த பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் அளவுக்கு அதிகமான மழை வெள்ளம், வெப்ப அலை, வறட்சி போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர ஐ.நா. மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உலகின் வெப்பநிலை உயராமல் கட்டுப்படுத்தவும், அதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை படிப்படியாகக் குறைக்கவும் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் ஒப்புக்கொண்டன.

இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை செப்டம்பா் மாதம் உச்சத்தைத் தொட்டுள்ள சராசரி வெப்பம் உணா்த்துவதாக ஐரோப்பிய யூனியன் நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com