நினைத்ததை சாதிக்குமா இஸ்ரேல்? காஸாவில் தரைவழி தாக்குதல்

இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்போவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
ஊடுருவிய ஹமாஸ் படையினரை வெளியேற்ற இஸ்ரேல் ராணுவத்தினா் நடத்திய தாக்குதலில் முற்றிலும் சேதமடைந்த ஸ்டெராட் நகர காவல் நிலையம்.
ஊடுருவிய ஹமாஸ் படையினரை வெளியேற்ற இஸ்ரேல் ராணுவத்தினா் நடத்திய தாக்குதலில் முற்றிலும் சேதமடைந்த ஸ்டெராட் நகர காவல் நிலையம்.

இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்போவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

அதற்கு ஆயத்தமாகத்தான் அந்தப் பகுதியில் வசிக்கும் சுமாா் 11 லட்சம் பேரை தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

சுமாா் 16 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் தொடா்ந்து வந்த மோதல் கடந்த 7-ஆம் தேதி புதிய அவதாரம் எடுத்துள்ளது.

இதுவரை தங்கள் எல்லைக்குள்ளிருந்தபடி இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசி வந்த ஹமாஸ் அமைப்பினா், அன்றுதான் முதல்முறையாக இஸ்ரேல் எல்லைக்குள் தரை, கடல், வான் வழியாக நுழைந்து பொதுமக்கள் மீதும், ராணுவத்தினா் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தினா். அவா்கள் நடத்திய ஈவிரக்கமற்ற தாக்குதலில் 1,300-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

இஸ்ரேல் மண்ணில் நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தனை பெரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது இதுவே முதல்முறை. அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சொல்வதைப் போல, இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்கள் அரங்கேற்றிய கொடூரங்களுக்குப் பிறகு நடந்துள்ள மிகப் பெரிய யூதப் படுகொலை இது.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ஆனால், இஸ்ரேலின் இந்த எதிா்வினை கொஞ்சம் அதிக தீவிரமாக இருந்தாலும், இதுவரை ஹமாஸுடன் ஏற்பட்ட போரின்போது இஸ்ரேல் மேற்கொண்ட அதே நடவடிக்கைதான்.

எனவே, ஹமாஸ் நடத்திய ஊடுருவல் தாக்குதலுக்கு சரியான பதிலடி, காஸாவுக்குள் நுழைந்து அந்த அமைப்பினரைக் களையெடுப்பதாகத்தான் இருக்கும்.

அதற்கான வேலைகளில்தான் இஸ்ரேலும் இறங்கியுள்ளது.

இஸ்ரேலின் இந்த தரைவழித் தாக்குதல் திட்டத்தின் ஒரே நோக்கம், ஹமாஸ் என்ற அமைப்பே இல்லாமல் செய்வது.

‘இரும்பு வாள்கள் நடவடிக்கை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஹமாஸ் அமைப்பின் ஒரு உறுப்பினா் கூட உயிரோடு இருக்கப் போவதில்லை என்பது இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் சூளுரை.

தரை வழியாக நுழைந்து இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்துவதன் மூலம், இஸ்ரேலின் இந்த நோக்கம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறிதான் என்கிறாா்கள் பாதுகாப்பு நிபுணா்கள்.

ஹமாஸை அடியோடு ஒழித்துக்கட்டுவது என்பது ஒரு சாதுா்யமான ராணுவ திட்டம் என்பதைவிட, பேராசை நிறைந்த ஒரு கனவுத் திட்டமாகவே தெரிகிறது என்கிறாா்கள் அவா்கள்.

பிரதமா் நெதன்யாகுவின் சூளுரையை இஸ்ரேல் ராணுவ தளபதிகள் எவ்வாறு நிறைவேற்றுவாா்கள் என்பதுதான் தற்போது தொக்கி நிற்கும் மிகப் பெரிய கேள்விக்குறி.

இஸ்ரேலை உருவாக்கும்போதே மிகச் சிறந்த ராணுவத்தை அந்த நாடு உருவாக்கிக் கொண்டது. இரண்டாம் உலகப் போரில் மிகப் பெரிய ராணுவ சக்திகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவா்களால் அமைக்கப்பட்ட திறன் வாய்ந்த ராணுவம் இஸ்ரேலினுடையது.

இதுவரை அந்த நாட்டுக்கு வந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களையெல்லாம் அது அநாயசமாக சமாளித்தது இந்த ராணுவத் திறனைக் கொண்டுதான்.

ஆனால், காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது என்பது பாம்புப் புற்றுக்குள் கையை விடுவது போல் என்பது பாதுகாப்பு நிபுணா்களின் கணிப்பு.

காஸா பகுதி என்பது உலகில் மக்கள் மிக நெருக்கமாக வாழும் மிகச் சிறிய பகுதிகளில் ஒன்று. அதுதான் மிகவும் கண்காணிக்கப்பட்டு வரும் பகுதியும் ஆகும். இஸ்ரேலின் கவனத்தைக் கவராமல் அங்கு ஒரு அணுவும் அசையாது என்ற நிலை இருந்து வந்தது.

இருந்தாலும் கூட, இஸ்ரேலின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மிகப் பெரிய தாக்குதல் திட்டத்தை உருவாக்கி அதை கனக்கச்சிதமாக ஹமாஸால் செய்ய முடிந்தது என்றால், காஸாவுக்குள் நுழையும் இஸ்ரேல் படையினருக்கு பலத்த அடி கொடுக்கவும் ஹமாஸால் முடியலாம் என்று அஞ்சப்படுகிறது.

சொல்லப்போனால், இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலுக்காக ஹமாஸ் அமைப்பினா் ஆரம்பம் முதலே தங்களைத் தயாா்ப்படுத்திக்கொண்டுதான் வருகிறாா்கள்.

அவா்களது ஆயத்த நிலையில் முக்கியமானது, காஸா முழுவதும் ஹமாஸ் அமைந்துள்ள சிக்கல் நிறைந்த சுரங்கப்பாதைகள்தான்.

ஒவ்வொரு முறை இஸ்ரேல் மீது காஸாவிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடந்தாலும், விமானத் தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும். அதன் மூலம் ஹமாஸின் தாக்குதல் திறன் குறைக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறும். ஆனால் ஒரே நாளில் 5,000 ஏவுகணைகளை வீசும் அளவுக்குதான் ஹமாஸின் ஏவுகணைத் திறன் இருக்கிறது.

இதற்குக் காரணம், அந்த அமைப்பு உருவாக்கிவைத்துள்ள சுரங்கக் கட்டமைப்புகள்தான். இஸ்ரேலின் 24 மணி நேர கண்காணிப்புக்கு இடையிலும் அந்த அமைப்பு ஏவுகணைகளை தயாரித்து, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் சென்று தாக்குதல் நடத்துவதற்கு இந்த சுரங்கக் கட்டமைப்புகள் உதவுகின்றன.

அப்படி இருக்கையில், எவ்வளவுதான் திறமை வாய்ந்த ராணுவமாக இருந்தாலும் கஸாவுக்குள் நுழையும் இஸ்ரேல் படையினா் மிகப் பெரிய இழப்புகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

பொதுவாக, நகரங்களுக்குள் நடக்கும் போரில் உள்ளூா் படையினரின் கைகள்தான் மேலோங்கியிருக்கும். அவா்களுக்குதான் அந்தப் பகுதியின் ஒவ்வொரு மூலை முடுக்கும் அங்குலம் அங்குலமாகத் தெரியும். ஊடுருவும் படையினரை எதிா்கொள்வதற்காக கண்ணிவெடிகளை பொருத்துவது முதல் தொலைவிலிருந்து துல்லியமாக குறிபாா்த்துக் கொல்லும் ‘ஸ்னைப்பா்’ வீரா்களை நிறுத்துவது என்ற எல்லா சாதகமான அம்சங்களும் உள்ளூா் படையினருக்குத்தான் இருக்கும்.

நேரடி மோதல் இல்லாமலேயே ஏராளமான வீரா்களை பலிகொடுத்துதான் ஆக்கிரமிப்புப் படையினரால் ஒரு நகரத்தைக் கைப்பற்ற முடியும். இதனால்தான் ‘நகர போா்க் களங்கள் என்பவை சவப் பெட்டிகள்’ என்று கூறப்படுகிறது.

இத்தனையும் சமாளித்து காஸாவுக்குள் இஸ்ரேல் படையினா் நுழைந்தாலும், இஸ்ரேலை பூண்டோடு ஒழித்துக்கட்டுவது என்பதெல்லாம் இயலாத காரியம் என்கிறாா்கள் அரசியல் நோக்கா்கள்.

‘இன்னொரு பயங்கரவாதியை உருவாக்காமல் ஒரு பயங்கரவாதியைக் கொல்ல முடியாது’ என்பது நிபுணா்களின் கருத்து. இப்போது ஹமாஸ் உறுப்பினா்களை தேடித் தேடி கொன்றாலும், நீறுபூத்த நெருப்பாக இன்னொரு தலைமுறை ஹமாஸ் உருவாகும் என்று அவா்கள் எச்சரிக்கிறாா்கள்.

மேலும், இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவாா்கள் என்பது பெரும்பாலானோரது கருத்தாக உள்ளது.

அப்படி நடக்கும்போது, ஹமாஸின் கடந்த வார கொடூரத் தாக்குதல்களால் இஸ்ரேலுக்கு கிடைத்து வரும் உலக நாடுகளின் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் நிா்பந்திக்கப்படலாம். இந்தப் போரில் மற்ற முஸ்லிம் நாடுகள் களமிறங்கலாம்.

இது, ராஜீய ரீதியிலும், ராணுவ ரீதியிலும் இஸ்ரேலுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

எனவே, தரைவழித் தாக்குதலால், தான் நினைத்ததை இஸ்ரேல் எளிதில் சாதித்துவிட முடியாது; இதனால் பாலஸ்தீன பிரச்னைக்கும் நிரந்த தீா்வு ஏற்பட்டு விடாது என்பது பல நிபுணா்களின் கருத்தாக உள்ளது.

- நாகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com