தீவிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்

தீவிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடுமையான போர் தொடங்கி இன்று 10வது நாளை எட்டியிருக்கும் நிலையில், அங்கு போர் தீவிரமடைந்திருக்கிறது.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடுமையான போர் தொடங்கி இன்று 10வது நாளை எட்டியிருக்கும் நிலையில், அங்கு போர் தீவிரமடைந்திருக்கிறது.

இஸ்ரேல் ராணுவத்தினரால், காஸா மீது கொத்து கொத்துகளாக குண்டுகள் வீசப்பட்டதில் கடந்த சில மணி நேரத்தில் மட்டும் ஏராளமானோர் பலியானதாகக் கூறப்படுகிறது.

பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்தாவிட்டால், இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் நாட்டின் இதர கட்சிகளும் கூட, இஸ்ரேல் மீதான நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பது, உலகிலேயே மிகவும் நெரிசலான பகுதியான காஸாவில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

உயிர் பலிகள்
குறைந்தது 2,670 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பார்கள். இவர்களில் கால் பகுதியினர் குழந்தைகள். ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் பலியான இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1,400. இவர்களில் 286 பேர் ராணுவ வீரர்கள்.

காஸா சுகாதார அதிகாரிகள், இஸ்ரேல் வான்வழித்தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை ஐஸ்க்ரீம் பதப்படுத்தும் டிரக்குகளில் வைத்திருக்கிறார்கள். அவற்றை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையில், இடுகாடுகளிலும் போதிய இடமில்லாத நிலையும் நிலவுகிறது.

இஸ்ரேலின் ராணுவ தடயவியல் துறை நிபுணர்கள், கடந்த வாரம் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலியானவர்கள் துன்புறுத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க.. இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலும் காஸா போரும்! விரிவும் ஆழமும் கொண்ட அலசல்

காஸா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இருக்கும் எரிபொருள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

தற்காலிகமாக போர் நிறுத்தம் அல்லது ரஃபா எல்லையை திறந்துவிடுவது போன்ற தகவல்களை ஹமாஸ் மறுத்துவிட்டது.

பாலஸ்தீன மக்கள், தங்கள் வசிப்பிடத்தை விட்டு உயிரைப் பயணம் வைத்து வெளியேறுவதைக் காட்டிலும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையவே விரும்புகிறார்கள். 

இதற்கிடையே காஸாவில் எந்த நிலப்பரப்பையும் இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது, அது தவறாக அமைந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் தரைவழியாக தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில், காஸா பகுதிகளில், லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.  ஆனால், காஸாவில் மீட்புப் பணிகளை மேறகொண்டு வரும் உதவி அமைப்புகள் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்துவது மிகப்பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளன.

காஸாவின் எல்லைப் பகுதிகளில் தயாராக நின்று கொண்டிருக்கும் இஸ்ரேல் படையினர், காஸா பகுதிகளுக்குள் நுழைந்து தாக்குதலை தீவிரப்படுத்த தயாராகி வருகின்றனர். 

பாலஸ்தீனிய மருத்துவமனைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாக்ரள். 

காஸாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஐ.நா. முகாம்களில் குடிநீர் தீர்ந்துகொண்டிருக்கிறது. ஜெனரேட்டர்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இறக்கும் அபாயம் இருப்பதை மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியானாலும், அந்தப் பயணம் குறித்து உறுதி செய்யப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com