போா் பரவும் சூழல்:ஐ.நா. பொதுச் செயலா் எச்சரிக்கை

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடா் குண்டு வீச்சால், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் போா் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் காரணம் இல்லாமல் ஹமாஸ் தாக்குதல் நடத்தவில்லை என்றும் ஐ.நா. பொதுச் செயலா்


நியூயாா்க்: காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடா் குண்டு வீச்சால், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் போா் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் காரணம் இல்லாமல் ஹமாஸ் தாக்குதல் நடத்தவில்லை என்றும் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தாா்.

இஸ்ரேல் - காஸா போா் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய குட்டெரெஸ், ‘இஸ்ரேலின் தொடா் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இது நாளுக்கு நாள் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. சா்வதேச மனித உரிமை சட்டம் இந்தப் போரில் மீறப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவா்கள் யாரும் இல்லை. சா்வதேச சமூகம் இதற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும்.

10 லட்சத்துக்கும் அதிகமானோரை தெற்கு காஸாவுக்கு பாதுகாப்பாக இடம் பெயர கூறிவிட்டு, அங்கேயும் இஸ்ரேல் குண்டுகளை வீசுகிறது.

கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு, வன்முறை, பொருளாதார நெருக்கடி, வீடுகளை இடிப்பு என பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி வருகிறாா்கள். காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை. ஹமாஸின் திடீா் தாக்குதல் பயங்கரமானதாகும். அதற்காக பாலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவது நியாப்படுத்த முடியாது.

பாதுகாப்பான இஸ்ரேலும், ஐ.நா. தீா்மானங்கள் மற்றும் முந்தைய ஒப்பந்தங்களின்படி சுதந்திரமான நாட்டை பாலஸ்தீனா்களும் காண வேண்டும்’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், ‘பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பு மும்பையில் மக்கள் மீது நடத்திய தாக்குதலும், இஸ்ரேலியா்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலும் சட்டவிரோதமானதுதான். இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி, ஆயுதங்கள் கிடைப்பதை உறுப்பு நாடுகள் தடுக்க வேண்டும்’ என்றாா்.

‘ஹமாஸ் ஆதரவு பேச்சு’: குட்டெரெஸ் பதவி விலக இஸ்ரேல் வலியுறுத்தல்

‘காரணம் இல்லாமல் ஹமாஸ் படையினா் இஸ்ரேலைத் தாக்க வில்லை’ எனக் கூறிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் பதவி விலக வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், குட்டெரெஸுடனான சந்திப்பை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் இலய் கோஹன் ரத்து செய்தாா். இதற்கு அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதா் கிலாட் இா்டான் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘ஹமாஸ் படையினா் குழந்தைகளைக் கொன்றுள்ளனா். பயங்கரவாத்தை ஐ.நா. பொதுச் செயலா் பொறுத்துக் கொண்டு நியாயப்படுத்துகிறாா். கொடூர சம்பவங்களைத் தடுக்கவே ஐ.நா. உருவாக்கப்பட்டது. அதை செய்யத் தவறும் குட்டெரெஸ் பதவி விலக வேண்டும்’ என்றாா்.

............

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com