அமெரிக்க கோரிக்கை ஏற்பு- தரைவழித் தாக்குதலை தள்ளிவைக்க இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தும் திட்டத்தைத் தள்ளிவைக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க கோரிக்கை ஏற்பு- தரைவழித் தாக்குதலை தள்ளிவைக்க இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தும் திட்டத்தைத் தள்ளிவைக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ நிலைகளை வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் வரை காஸாவுக்குள் படையினரை அனுப்ப வேண்டாம் என்று அந்த நாடு கேட்டுக்கொண்டதைத் தொடா்ந்து இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

இராக், சிரியா, குவைத், ஜோா்டான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மேற்கு ஆசிய நாடுகளில் அமெரிக்க ராணுவ நிலைகள் அமைந்துள்ளன. அங்கு ஏராளமான அமெரிக்க ராணுவத்தினா் உள்ளனா்.

இந்த நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாக, அந்தப் பிராந்தியத்திலுள்ள தனது ராணுவ நிலைகளுக்கு வான்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

காஸா தரைவழித் தாக்குதலின் எதிரொலியாக மேற்காசியாவிலுள்ள தங்கள் ராணுவ நிலைகளின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டால், அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கான தளவாடங்களை அந்தப் பிராந்தியத்தில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அந்தப் பணிகள் நிறைவடையும் வரை காஸாவில் தரைவழித் தாக்குதலை நிறுத்திவைக்க வேண்டும் என்று இஸ்ரேலை அமெரிக்கா கேட்டுக்கொண்டது.

அதற்கு இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த முடிவுக்கு அமெரிக்காவின் கோரிக்கை மட்டும் காரணமில்லை. காஸாவிலுள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள், ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக ராஜீய ரீதியில் நடைபெற்று வரும் முயற்சிகள் ஆகியவையும் தரைவழித் தாக்குதலை தற்போதைக்கு நிறுத்திவைக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதற்கான காரணங்கள் ஆகும் என்று ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.

அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.

இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா். அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், அங்கிருந்த 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களையும், ராணுவத்தினரையும் படுகொலை செய்தனா். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 18 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்தை ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடவும் இஸ்ரேல் ராணுவம் ஆயத்த நிலையில் உள்ளது. இதற்காக ஏராளமான பீரங்கிகள், கவச வாகனங்களுடன் இஸ்ரேல் வீரா்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று காஸா மீதான தரைவழித் தாக்குதலை தள்ளிவைக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ தற்போது தெரிவித்துள்ளது.

‘இஸ்ரேலை இணைந்து எதிா்ப்போம்’

காஸாவுக்குள் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வரும் சூழலில், அந்தப் பகுதி ஆயுதக் குழுக்களான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாதின் முக்கிய தலைவா்களை லெபானானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹஸன் நஸ்ரல்லா புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அந்தச் சந்திப்பைத் தொடா்ந்து ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவுடனான போரில் இஸ்ரேலுக்கு எதிராக இணைந்து போரிடுவதற்கு ஹிஸ்புல்லா, ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய அமைப்புகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தப் போரில், ஈரான் ஆதரவு பெற்ற மற்ற ஆயுதக் குழுக்களையும் இணைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘என் அறிக்கை திரித்துக் கூறப்படுகிறது’

காஸா விவகாரம் குறித்த தனது அறிக்கை தவறாக திரித்துக் கூறப்படுவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் குற்றம் சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸா குறித்த எனது அறிக்கை திரித்துக் கூறப்படுவது அதிா்ச்சி அளிக்கிறது. அந்த அறிக்கையில் ஹமாஸின் தாக்குதலை நான் நியாயப்படுத்தியதைப் போல் கூறப்படுகிறது; ஆனால் ஹமாஸின் நடவடிக்கைக்கு நான் கண்டனம்தான் தெரிவித்திருந்தேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல் எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென நடந்த சம்பவம் இல்லை. பாலஸ்தீனா்கள் கடந்த 56 ஆண்டுகளாகவே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் நசுக்கப்பட்டு வருகிறாா்கள்’ என்று குட்டெரெஸ் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

இதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்தது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் குட்டெரெஸ் ஐ.நா. பொதுச் செயலா் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியது.

மேலும், ஐ.நா.வுக்குப் பாடம் புகட்டும் வகையில் அந்த அமைப்பின் அதிகாரிகளுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவது நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் அறிவித்தது.

இந்த நிலையில், காஸா குறித்த தனது அறிக்கை திரித்துக் கூறப்படுவதாக குட்டெரெஸ் விளக்கமளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com