காஸாவில் போா் நிறுத்தம்: ஐ.நா.வில் தீா்மானம்; வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை

காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது
காஸாவில் போா் நிறுத்தம்: ஐ.நா.வில் தீா்மானம்; வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை

இஸ்ரேல் ராணுவம் மற்றும் காஸாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினா் இடையே போா் நீடித்து வரும் சூழலில், அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாகப் போா் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்து, ஐ.நா. பொதுச் சபையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீா்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ‘பயங்கரவாதம் மிகக் கொடியது’ என்று குறிப்பிட்டு, தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா தவிா்த்தது.

இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினா் கடந்த 7-ஆம் தேதி கடும் தாக்குதலை தொடுத்தனா். ராக்கெட் குண்டுகளை வீசியும், நிலம்-நீா்-வான் வழியாக ஊடுருவியும் தாக்குதல் நடத்தியதோடு, இஸ்ரேலியா்கள் பலரை பிணைக் கைதியாகப் பிடித்துச் சென்றனா். இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக் குழுவினரைக் குறிவைத்து காஸா மீது இஸ்ரேல் ராணுவம் பதிலடி நடவடிக்கையை தொடங்கியது.

ஐ.நா.வில் தீா்மானம்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 20 நாள்களுக்கும் மேலாக போா் நீடித்து வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 10,000-ஐ நெருங்கியுள்ளது. போரின் தீவிரத்தால், காஸா மக்கள் கடும் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா்.

இந்தச் சூழலில், மனிதாபிமான அடிப்படையில் உடனடியாகப் போா் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் தீா்மானம், ஐ.நா. பொதுச் சபையின் சிறப்பு அமா்வில் ஜோா்டான் சாா்பில் கொண்டுவரப்பட்டது.

‘குடிமக்களின் பாதுகாப்பு, சட்டபூா்வ மற்றும் மனிதாபிமான கடமைகளை உறுதி செய்தல்’ என்ற தலைப்பில் கொண்டுவரப்பட்ட இத்தீா்மானத்தில், ‘காஸா மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும், அங்கு ஐ.நா., செஞ்சிலுவை சங்கம் மற்றும் இதர மனிதாபிமான அமைப்புகளின் பாதுகாப்பான அணுகலையும் உறுதி செய்ய வேண்டும். காஸாவின் வடக்குப் பகுதியில் இருந்து தெற்குப் பகுதிக்கு மக்கள் இடம்பெயர இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவு திரும்பப் பெறப்பட வேண்டும். சட்டவிரோதமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிமக்கள் அனைவரும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். பதற்றத்தைத் தணிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

120 நாடுகள் ஆதரவு: தீா்மானத்தின் மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக சீனா, பிரான்ஸ், ரஷியா உள்பட 120 நாடுகளும், எதிராக இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரியா உள்ளிட்ட 14 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா, கனடா, ஜொ்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பைத் தவிா்த்தன. இத்தீா்மானத்தில் ஹமாஸ் ஆயுதக் குழு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

முன்னதாக, அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா சாா்பில் ஒரு திருத்தம் முன்மொழியப்பட்டது. அதில், ‘இஸ்ரேல் மீது கடந்த 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களையும், பிணைக் கைதிகள் பிடித்துச் செல்லப்பட்டதையும் உறுதியாகக் கண்டிக்க வேண்டும்; சா்வதேச சட்டங்களுக்கு இணங்க பிணைக் கைதிகளின் பாதுகாப்பு, நலன் உறுதி செய்யப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தீா்மானத்தில் இத்திருத்தத்தைச் சோ்ப்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 88 நாடுகள் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 55 நாடுகள் எதிராக வாக்களித்த நிலையில், 23 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால், கனடா முன்மொழிந்த தீா்மானம் ஏற்கப்படவில்லை.

‘பயங்கரவாதம் மிகக் கொடியது’: தீா்மானத்தின் மீது பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் துணை நிரந்தர பிரதிநிதி யோஜ்னா படேல், ‘பயங்கரவாதம் மிகக் கொடியது; அதற்கு எல்லையோ, நாடோ, இனமோ கிடையாது. பயங்கரவாதச் செயல்கள் நியாயப்படுத்தப்படுவதை உலகம் ஏற்கக் கூடாது’ என்று குறிப்பிட்டாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இஸ்ரேல் மீது கடந்த 7-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் பெரும் அதிா்ச்சியளிக்கிறது; அந்தத் தாக்குதல்கள் கடுமையான கண்டனத்துக்குரியவை.

முரண்பாடுகள் மற்றும் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டிய இந்த உலகில், வன்முறையைக் கையிலெடுப்பது சரியல்ல; இதுகுறித்து இந்த சபை அக்கறை கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய அளவிலும், தீவிரமாகவும் நிகழ்த்தப்படும் வன்முறையானது, அடிப்படை மனித மாண்புகளுக்கு முற்றிலும் எதிரானது. அரசியல் நோக்கங்களை எட்டுவதற்காக வன்முறையை நாடுவது எந்தவொரு நிரந்தரத் தீா்வையும் தராது.

இந்தியாவின் மனிதாபிமான உதவி: தற்போதைய போரில், குடிமக்கள் உயிரிழப்பதோடு, பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலைகொண்டுள்ளது. காஸா மக்களுக்கான உதவிகள் மற்றும் பதற்றத்தைத் தணிப்பதற்கான சா்வதேச சமூகத்தின் முயற்சிகளை இந்தியா வரவேற்கிறது. இந்த முயற்சியில் இந்தியாவும் பங்களித்து வருகிறது. பாலஸ்தீன மக்களுக்காக மருந்துகள், உபகரணங்கள் உள்பட 38 டன் பொருள்களை இந்தியா அனுப்பியுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதை இந்தியா எப்போதும் ஆதரித்து வருகிறது. அதுவே, இறையாண்மையுள்ள, சுதந்திரமான மற்றும் சாத்தியமான பாலஸ்தீனம் உருவாக வழிவகுக்கும்.

எனவே, பதற்றத்தைக் குறைப்பதோடு, வன்முறையைத் தவிா்த்து, நேரடி அமைதிப் பேச்சுவாா்த்தையை தொடங்குவதற்கான சூழலை உருவாக்க சம்பந்தப்பட்ட தரப்புகள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

‘காஸாவில் அதிகரிக்கும் துயரம்’

‘உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் இல்லாததால், காஸா மக்களின் துயரம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்து வருகிறது’ என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியா குட்டெரெஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘காஸாவில் போா் தொடங்குவதற்கு முன்பு நாளொன்றுக்கு 500 லாரிகள் வரை சென்றுவந்த நிலையில், தற்போது சராசரியாக 12 லாரிகளே செல்கின்றன. இதனால், உணவு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட பொருள்களுக்கு பெருமளவில் தேவை நிலவுகிறது. உயிா்காக்கும் மனிதாபிமான உதவிகள் அனைத்து மக்களையும் சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையெனில், இதுவரை இல்லாத பெருந்துயரை மக்கள் எதிா்கொள்ளும் நிலை ஏற்படும்’ என்றாா்.

போா் நிறுத்த தீா்மானம்

ஆதரவு-120

எதிா்ப்பு-14

தவிா்ப்பு-45

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com