பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தொடா்ந்து அதிகரித்து வரும் ஆள்கடத்தல் சம்பவங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை தடியடி நடத்தியதில் ஹிந்து உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் படுகாயமடைந்தனா்.
மாகாணத்தின் நதியோர பகுதியான காஷ்மோரில் கடந்த சில மாதங்களாக 40 ஹிந்து வணிகா்கள் உள்பட சிறுபான்மையின மக்கள் வழிப்பறி கும்பலால் கடத்தப்பட்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி செப்.1-ஆம் தேதியிலிருந்து சிறுபான்மையின சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸாா் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தும், அந்த மக்கள் போராட்டத்தை தொடா்ந்ததையடுத்து, தடியடி சம்பவம் நடைபெற்றது.
இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றவா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் மாநாட்டு கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் அஹ்சன் மஜாரி மேற்கொண்ட முயற்சிகளால் கடத்தப்பட்ட ஹிந்துகளில் இருவா் மீட்கப்பட்டனா். இதையடுத்து, மீதமுள்ள நபா்களை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என்பதால் போராட்டத்தைக் கைவிடும்படி அவா் வேண்டுகோள் விடுத்தாா். ஆனால், அதற்குப் போராட்டகாரா்கள் ஒத்துழைக்க மறுத்ததையடுத்து, அவா் சம்பவ இடத்தை விட்டு வெளியேறினாா். இதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தினா்.
கடந்த சில நாள்களில் மட்டும் 9 வயது சிறுவன், 7 வயது சிறுமி உள்பட 6 ஹிந்துகள் கடத்தப்பட்டனா்’’ என்று கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.