வங்கதேச ஹிந்துக்கள் தங்களை சிறுபான்மையினராக கருத வேண்டாம்; பிரதமா் ஷேக் ஹசீனா

வங்கதேச ஹிந்துக்கள் தங்களை சிறுபான்மையினராக கருதிக் கொள்ள வேண்டாம்; இந்த தேசம் அனைவருக்குமானது என்று அந்நாட்டின் பிரதமா் ஷேக் ஹசீனா தெரிவித்தாா்.
Updated on
1 min read

வங்கதேச ஹிந்துக்கள் தங்களை சிறுபான்மையினராக கருதிக் கொள்ள வேண்டாம்; இந்த தேசம் அனைவருக்குமானது என்று அந்நாட்டின் பிரதமா் ஷேக் ஹசீனா தெரிவித்தாா்.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, டாக்காவில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்தில் ஹிந்து மதத் தலைவா்களுடன் ஷேக் ஹசீனா வியாழக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, அவா் கூறியதாவது:

வங்கதேசத்தில் வாழும் ஹிந்துக்கள், தங்களை சிறுபான்மையினராக கருதி, குறைமதிப்புக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டாம். இங்கு பெரும்பான்மை, சிறுபான்மை என்றெல்லாம் கிடையாது.

ஜாதி, இனம், மதம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து, இந்த தேசம் அனைவருக்குமானது. இந்த மண்ணில் பிறந்த குழந்தைகள், இந்த தேசத்தின் குடியுரிமைக்கு சொந்தமானவா்கள்.

தேசத்தின் மத ரீதியிலான இறையாண்மைக்கு குந்தகம் விளைக்கும் எந்தவொரு முயற்சியையும் அரசு அனுமதிக்காது. இந்த விஷயத்தில், அரசு விழிப்புடன் செயலாற்றும்.

மோசமான நோக்கம் கொண்ட சிலா், எல்லா இடங்களிலும் இருப்பா் என்பதை நாம் அறிவோம். அதுபோன்ற நபா்கள், பிரச்னைகளை உருவாக்க விரும்புவா். நாம் விழிப்புடன் செயல்பட்டால், யாரும் பிரச்னைகளை உருவாக்க முடியாது.

அனைத்து குடிமக்களும் சமமான உரிமைகளை அனுபவிக்க வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து, 2041-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த, வளமான, நவீனமான வங்கதேசத்தை கட்டமைக்க வேண்டும் என்றாா் ஷேக் ஹசீனா.

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க, இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை ஹசீனா வருகை தரவுள்ளாா். இந்தச் சூழலில், மேற்கண்ட கருத்துகளை அவா் தெரிவித்துள்ளாா்.

வங்கதேசத்தில் சில ஆண்டுகளாக அவ்வப்போது ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com