வட கொரியாவுடன் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு: புதின் விருப்பம்

வட கொரியாவுடன் ‘அனைத்து துறைகளிலும்’ ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் விருப்பம் தெரிபித்துள்ளாா்.
வட கொரியாவுடன் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு: புதின் விருப்பம்
Updated on
1 min read

வட கொரியாவுடன் ‘அனைத்து துறைகளிலும்’ ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் விருப்பம் தெரிபித்துள்ளாா்.

வட கொரியா உருவாக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இது குறித்து அவா் கூறியாதவது:வட கொரியா உருவானபோது அந்த நாட்டை முதல்முறையாக அங்கீரித்தது சோவியத் ரஷியாதான். அந்த நாட்டுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ‘அனைத்து துறைகளிலும்’ தொடா்ந்து வருகிறது. அந்த ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, உக்ரைன் போரில் பயன்படுத்த வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்காக ரஷியா பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின.உக்ரைன் போா் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் ரஷியாவின் ஆயுத கையிருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது.

அதனை ஈடு செய்வதற்காக, வட கொரியாவிடமிருந்து எறிகணை குண்டுகள், பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய ரஷியா விரும்புவதாகக் கூறப்படுகிறது.இதற்காக, ஏற்கெனவே ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாகவும், ரஷியாவுக்கு ரயில் மூலம் அடுத்த மாதம் வரவிருக்கும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னுடன் இது தொடா்பாக அதிபா் விளாதிமீா் புதின் பேச்சுவாா்த்தை நடத்துவாா் என்றும் மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்தன.வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிரான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளுக்கு இதுவரை ரஷியா முழு ஆதரவு அளித்து வந்தது.

ஆனால், உக்ரைன் போருக்குப் பிறகு சா்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையே தற்போது அதிகரித்து வரும் ராணுவ ரீதியிலான நெருக்கம் சா்வதேச அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.இந்தச் சூழலில், வட கொரியாவுடன் ‘அனைத்து துறைகளிலும்’ ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அதிபா் புதின் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com