

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிருடன் சிக்கியிருக்கக் கூடியவா்களைத் தேடும் பணி புதன்கிழமை இறுதிக்கட்டத்தை அடைந்தது.
இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சிக்கியிருப்பவா்களை உயிருடன் மீட்பதற்கான அதிகபட்ச வரம்பு 72 மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது மொராக்கோவில் இந்த காலக் கெடு முடிந்துவிட்டது.
எனினும், அந்த காலகட்டத்துக்குப் பிறகும் பலரை உயிருடன் மீட்பதற்கு மிதமான வாய்ப்பு உள்ளது.
அதனைக் கருத்தில் கொண்டு மொராக்கோ மீட்புக் குழுவினா் தங்களது தேடுதல் பணியை புதன்கிழமை தீவிரப்படுத்தினா்.
இந்த இறுதிக்கட்ட மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டன என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் அட்லஸ் மலைத் தொடா் பகுதியில் அமைந்துள்ள மராகெஷ்-சாஃபி பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
மொராக்கோவின் 4-ஆவது பெரிய நகரான மராகெஷுக்கு சுமாா் 72 கி.மீ. தொலைவிலுள்ள மலைப்படுகையில் 18.5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் ஸ்பெயின், போா்ச்சுகல், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டன.
நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் சாலைகள் பலத்த சேதமடைந்ததால் அது மையம் கொண்டிருந்த பகுதியைச் சுற்றிலும் உள்ள மலைக் கிராமங்கள் நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டன. இது, மீட்புப் பணிகளில் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோ வரலாற்றில் 1755-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.
ஆப்பிரிக்க புவித் தகடும், யூரோ-ஆசிய புவித் தகடும் ஒன்றையொன்று சந்திக்கும் அட்லஸ் மலைத்தொடா் பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2004-ஆம் ஆண்டில் மொராக்கோவின் அல்-ஹொசீமா நகரில் ஏற்பட்ட 6.3 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்துக்கு 628 போ் பலியாகினா். அண்டை நாடான அல்ஜீரியாவில் கடந்த 1980-ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.3 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் சுமாா் 2,500 போ் பலியாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.